காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு - மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து 1.20 லட்சம் கனஅடியாக உயர்வு
டெல்டா பாசனப்பகுதி சாகுபடி பணிக்காக 1,19,951 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்கால்களில் 920 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு நேற்று வினாடிக்கு, 54 ஆயிரத்து 604 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு ஒரு லட்சத்து, 20 ஆயிரத்து, 871 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது.டெல்டா பாசனப்பகுதி சாகுபடி பணிக்காக 1,19,951 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்கால்களில் 920 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், கரூர் மாவட்ட எல்லையான, தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப் பகுதிகளுக்கு, பொதுமக்கள் செல்வதை தடுக்க வருவாய்த்துறை சார்பில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், காவேரி ஆற்று கரையோர பொது மக்களுக்கு கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஒலிபெருக்கி மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள் விடப்பட்டு வருகிறது.
அமராவதி அணையின் இன்றைய தண்ணீர் நிலவரம்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 468 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்கால்களில் 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 77.10 அடி ஆக இருந்தது. கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 1,157 கன அடி தண்ணீர் வந்தது.
நங்காஞ்சி அணையின் இன்றைய தண்ணீர் நிலவரம்.
திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 32.81 அடியாக இருந்தது.
ஆத்துப்பாளையம் அணையின் இன்றைய தண்ணீர் நிலவரம்.
கரூர் மாவட்டம், க. பரமத்தி அருகே கார்வழி, ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 155 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 19.18 அடியாக இருந்தது. அணையில் இருந்து நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு நிலவரத்தை காணலாம்.
கரூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீ).
கரூரில் 5.04 மில்லி மீட்டராகவும், அரவக்குறிச்சியில் 3.00 மில்லி மீட்டராகவும், அனைப்பாளையத்தில் 44.00 மில்லி மீட்டராகவும், குளித்தலையில் 3.00 மில்லி மீட்டராகவும், தோகை மலையில் 3.04 மில்லி மீட்டராகவும், கிருஷ்ணாயபுரத்தில் 16.0 மில்லி மீட்டராகவும், மாயனூரில் 5.00 மில்லி மீட்டராகவும், பஞ்சபட்டியில் 4.00 மில்லி மீட்டராகவும், கடவூர் பகுதியில் 3.00 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கரூர் மாவட்டத்தில் சராசரியாக 7.23 மில்லி மீட்டர் மழையின் அளவு பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.