(Source: ECI/ABP News/ABP Majha)
கரூரில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் - மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்
சிறப்பு மருத்துவ முகாமில் பொது மருத்துவம் இருதய நோய் சிகிச்சை, சர்க்கரை நோய், புற்றுநோய், பல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம் குடும்ப நல சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.
கரூர் மாநகராட்சி வெங்கமேடு ஈக்விடாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பார்வையிட்டார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு முழுவதும் 100 பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடை பெற்று வருகிறது. அதையொட்டி கரூர் மாநகராட்சி வெங்கமேட்டில் இந்த மூகாம் நடத்தப்பட்டு வருகிறது. இச்சிறப்பு முகாமில் மருத்துவக் கல்லூரியில் உள்ள அனைத்து சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் அனைத்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மருந்து ஆளுநர்கள் ஆய்வக நுட்பநர்கள் மற்றும் பல்வேறு இதர பணியாளர்கள் அனைவரும் பொதுமக்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள அனைத்து மருத்துவ உபகரணங்கள் கருவிகள் போன்றவற்றை எடுத்து வந்து இந்த முகாமில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அவர்களது மருத்துவமனை கருவிகள் உபகரணங்கள் போன்றவற்றையும் முகாமில் எடுத்து வந்து இலவச சிகிச்சை அளித்து வருகிறார்கள். பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் இலவச காப்பீடு திட்ட அட்டைகளும் வழங்கப்பட்டது. சிறப்பு மருத்துவ முகாமில் பொது மருத்துவம் இருதய நோய் சிகிச்சை, சர்க்கரை நோய், புற்றுநோய், பல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம் குடும்ப நல சிகிச்சை மற்றும் ஆலோசனை பால்வினை நோய் பரிசோதனை, மகப்பேறு, மருத்துவம், குழந்தை மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம், கண் சிகிச்சை, தோல் மருத்துவம், மனநல மருத்துவம், இ.சி.ஜி பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை, இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை சித்தா யோகா மருத்துவம் ஆகியவைகள் ஒரே இடத்தில் அனைத்து மருத்துவ வசதிகளும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. மேலும், கரூர் மாவட்டத்தில் உதிரம் உயர்த்துவோம், பொக்கிஷம் திட்டம், தோழி போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிக அளவிலான பொதுமக்கள் இம் முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு உரிய சிகிச்சையை பெற்று அனைவரும் நலமுடன் வாழ்வதே இதன் நோக்கமாகும். மேலும் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பாக மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பல்நோக்கு சிறப்பு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் அமைத்தல், புதிய தலைமை மருத்துவமனைகளை உருவாக்குதல், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டம், கண்ணொளி காப்போம் திட்டம், வளரிளம் பருவ பெண்களுக்கான தோழி என்ற சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம், இரத்த சோகை கண்டறியும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நிறைவாக 45 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும்,-10 பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளையும்,44 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். இம்முகாமில் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.தமோதரன், கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிசந்திரன், துணை மேயர் சரவணன், மண்டல தலைவர் சக்திவேல், துணை இயக்குனர் மரு.சந்தோஷ்குமார்(சுகாதாரப்பணிகள்), இணை இயக்குநர். (நலப்பணிகள்) மரு, சுதர்சனயேசுதாஸ், தனி துணை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Join Us on Telegram: https://t.me/abpdesamofficial