கரூரில் அதிமுக இணை செயலாளர் சிவராஜ் கடத்தல்; பின்னர் மீட்பு - நடந்தது என்ன..?
கரூரில் அதிமுக ஐடி விங் நிர்வாகி கடத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான சம்பவம். மருத்துவமனையில் இருந்து சம்பவத்தின் பின்னணி குறித்து பேட்டியளித்த அளித்த அவரது சகோதரி.
கரூரில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலாளர் சிவராஜ் மர்ம நபர்களால் ஆயுதங்களைக் காட்டி கடத்தி தாக்கப்பட்டார். காவல்துறையினர் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீட்டனர்.
கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகி திருவிக நேற்றுமுன்தினம் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் கரூர் அடுத்த வேலுச்சாமிபுரம் பகுதியில் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் சிவராஜ் இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர் சிலரால் காரில் கடத்தப்பட்டார்.
அதிமுக நிர்வாகி சிவராஜ் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் - கோவை நெடுஞ்சாலை முனியப்பன் கோவில் பகுதியில் அரசு பேருந்துகளை முற்றுகையிட்டு, அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடத்தப்பட்ட அதிமுக நிர்வாகி சிவராஜ் ஒரு மணி நேரத்திற்குள் மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டு சுக்காலியூர் காட்டுப்பகுதியில் போலீசார் மற்றும் அதிமுகவினரால் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார். இதற்கிடையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்புக்கு உள்ளானது. அதனை தொடர்ந்து அதிமுகவினர் கடத்திய நபர்கள் மீது வழக்கு பதிய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
மேலும், கடத்திய நபர்கள் மீது வழக்கு பதியவில்லை என்றால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கரூரில் மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகி மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரூர் மாவட்ட அதிமுக ஐடி விங் இணைச் செயலாளர் சிவராஜ்-ன் அக்கா கவிதா என்பவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
மாலை 6.30 மணி அளவில் வீட்டை விட்டு வெளியேறிய சிவராஜ் சுமார் 7 மணி அளவில் கடத்தப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அவரை 6 பேர் கடத்திச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். குமார் என்பவருடன் வந்த ஆறு பேர் தன்னை கடத்திச் சென்றதாக சிகிச்சையில் உள்ள சிவராஜ் எங்களிடம் தெரிவித்தார். அவருக்கு பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக உள்ள எனது தம்பி சிவராஜ், சமூக வலைத்தளங்களில் எந்த பதிவும் போடக்கூடாது என்று மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடைபெற்றுள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.