Nandini Cattle Feed: ஆவினுக்கு ஆப்படிக்கும் நந்தினி? தமிழக அரசு விழிக்குமா? ஏற்கனவே சென்னை அவுட்டாமே..!
Nandini Cattle Feed In TN: தமிழ்நாடு கால்நடை தீவன சந்தையில் கர்நாடகாவின் நந்தினி நிறுவனம் தடம் பதிக்கும் முயற்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Nandini Cattle Feed In TN: கர்நாடாகாவைச் சேர்ந்த நாட்டின் இரண்டாவது பெரிய பால் கூட்டுறவு நிறுவனம், தனது வியாபாரத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
நந்தினியின் விரிவாக்க திட்டம்:
கர்நாடகாவின் பால் கூட்டமைப்பானது (KMF) தனது நந்தினி பிராண்ட் கால்நடை தீவனத்தை தமிழ்நாட்டிற்கு விரிவுபடுத்தும் நடவடிக்கை, பால் பங்குதாரர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பிராண்டின் வணிக ரீதியான நடவடிக்கைகள் ஆவின் நிறுவனத்தின் நீண்டகால சுற்றுச்சூழல் அமைப்பை சீர்குலைத்து, அதனைச் சார்ந்துள்ள தமிழகத்தின் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம் என குறிப்பிடுகின்றனர். நாட்டின் இரண்டாவது பெரிய பால் கூட்டுறவு நிறுவனமான KMF, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா மற்றும் கோவாவில் நந்தினி கால்நடை தீவனப் பொருட்களை சந்தைப்படுத்த விநியோகஸ்தர்களை முறையாக அழைத்துள்ளது.
ஆவினிற்கு ஆபத்து?
கர்நாடகாவை தளமாகக் கொண்ட கூட்டுறவு நிறுவனம் அதன் தற்போதைய சந்தைகளான கர்நாடகா மற்றும் கேரளாவைத் தாண்டி, தனது வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக அண்டை மாநிலங்களில் இருந்து விநியோகஸ்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஒன்பது பெரிய அளவிலான தீவன ஆலைகள் மற்றும் மாதத்திற்கு 1.12 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட நந்தினி, போட்டி விலையிலும், ஊட்டச்சத்து மிக்க தீவனத்தையும் வழங்குகிறது. ஒருவேளை தமிழ்நாடு சந்தையில் நந்தினி பொருட்கள் அறிமுகமானால், அது ஆவின் கால்நடை தீவன நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என கூறப்படுகிறது.
பால் விற்பனையாளர்கள் எச்சரிக்கை:
நந்தினி பிராண்ட் பொருட்கள் நமது மாநிலத்தில் கால்பதிப்பது என்பது, ஒரு ஆபத்தான முன்னுதாரணம் என்று தமிழ்நாடு பால் விற்பனையாளர்கள் தொழிலாளர் நலச் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ. பொன்னுசாமி எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், ”நந்தினி தமிழ்நாடு விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யவில்லை. ஆனால் அது உள்ளூரு விநியோகச் சங்கிலியில் ச நுழைகிறது. இது ஆவின் நிறுவனத்திற்கும் அதன் உற்பத்தியாளர்களுக்குமான அடிப்படை உறவைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது" என்றார்.
சென்னையை ஆட்டுவிக்கும் நந்தினி
மேலும் பேசுகையில், “நந்தினி பிராண்ட் ஏற்கனவே சென்னை சந்தையை சீர்குலைத்து வருகிறது. தனியார் விற்பனையாளர்கள் மற்றும் தேநீர் கடைகளுக்கு குறைந்த விலையில் தினமும் 80,000 லிட்டர் பாலை விநியோகிக்கிறது. இப்போது, அவர்கள் கால்நடை தீவன சந்தையிலும் ஆவின் பங்களிப்பை குறைக்க முயற்சிக்கிறார்கள். இது ஆரோக்கியமான போட்டி அல்ல - இது ஒரு கொள்கை தோல்வி. மாநில அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்” என்று எஸ்.ஏ. பொன்னுசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் பால் சந்தை ஏற்கனவே ஹட்சன் அக்ரோ, டோட்லா மற்றும் ஹெரிடேஜ் போன்ற தனியார் நிறுவனங்களின் அழுத்தத்தில் உள்ளது, இவை மாநிலத்தின் பால் சந்தையில் 45% ஐ கூட்டாகக் கட்டுப்படுத்துகின்றன. இந்த சூழலில் நந்தினி பிராண்டின் அறிமுகம் என்பது, ஆவின் நிறுவனத்திற்கு மேலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக் கூடும்.





















