Kanimozhi MP Birthday | திராவிடப் புதல்வி கனிமொழி கருணாநிதியின் கதை..
ஒருமுறை கனிமொழியிடம் மிகப் பெரிய அரசியல்வாதி நீங்க.. சமைப்பீங்களா என கேள்வி எழுப்பப்பட்டது. ஆண் அரசியல்வாதிகளை பார்த்து இப்படியான கேள்விகள் எழுப்பப்படுவதில்லையே என பதிலளித்தார்.
கருணாநிதியின் மகள்... இதுதான் ஆரம்பத்தில் கனிமொழியின் அடையாளம்.. திராவிட இயக்க பின்புலத்திலிருந்து வந்த காரணத்தினால் ஆரம்பத்திலிருந்தே தனது தந்தை கருணாநிதியைப் போலவே எழுதுவதிலும் வாசிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் கனிமொழி.. இலக்கியம் மற்றும் பத்திரிகைத்துறைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த கனிமொழி தீவிர அரசியலில் நுழைவதற்கு முன்பாக இந்தியாவில் இந்து ஆங்கில நாளேட்டிலும் சிங்கப்பூரில் தமிழ் முரசு இதழிலும் பணியாற்றியிருக்கிறார்.
அவரது " கருவறை வாசனை" எனும் கவிதைத்தொகுப்பு அவரை மிகச்சிறந்த நவீன கவிஞர்களில் ஒருவராக அடையாளம் காட்டியது. இந்தியா டுடேயில் வெளிவந்த அவரது எழுத்துக்கள் பின்னர் ' கருக்கும் மருதாணி' என்ற தொகுப்பாகவும் வெளிவந்தது. அவரது முற்போக்கான சமூக அரசியல் பெண்ணியக் கருத்துகள் திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாகவும் அதே சமயம் நவீனத்துவ சிந்தனைகளின் நீட்சியாகவும் அவரை இனம் காட்டியது.
2001-ஆம் ஆண்டு நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டார். அப்போது சென்னை சென்ட்ரல் அருகே இருந்த மத்திய சிறைச்சாலை வாசலில் தர்ணா போராட்டத்தில் கருணாநிதி ஈடுபட்டபோது அவருக்கு பக்கபலமாய் நின்ற கனிமொழியின் புகைப்படங்களை அவ்வளவு எளிதில் தமிழ் மக்களால் மறக்க முடியாது.
தற்போது நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறது திமுக.. டெல்லி தேசிய அரசியல் தமிழக முகமாய் பார்க்கப்படுகிறார் கனிமொழி.. அப்படிப்பட்ட கனிமொழி தீவிர அரசியலுக்கு வரவேண்டும் என்ற விருப்பம் கருணாநிதிக்கு எப்போதுமே இருந்திருக்கிறது. அதை கனிமொழியிடம் வலியுறுத்தி பேசி அவரை சம்மதிக்க வைத்தவர் துரைமுருகன். அதுவரை கலைஞரின் இலக்கியவாரிசாக இருந்த கனிமொழி 2007-ஆம் ஆண்டு முதன்முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மையப்படுத்தி தனது முதல் உரையை நிகழ்த்தினார் கனிமொழி.. 10 நிமிடம் நீடித்த அந்த உரையில் அனைவரையுமே அசர வைத்தார்... கனிமொழி தன்னுடைய உரையை முடித்ததும் கபில் சிபல் நேராக கனிமொழியின் இருக்கைக்கே வந்து அவரை பாராட்டினார். உங்களுடைய அறிவார்ந்த பேச்சுக்கு வாழ்த்துகள் என அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஒரு சீட்டில் எழுதி கனிமொழியிடம் கொடுக்கச் செய்திருக்கிறார். அன்று முதல் இன்று வரை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கனிமொழியின் உரைகள் பெரிதாக கவனிக்கப்படுகின்றன.
கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவின் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கனிமொழி, நான் பெரியார் மண்ணிலிருந்து வந்துள்ளேன் என தொடங்கி அழுத்தம் திருத்தமாக தன் கருத்துக்களை பதிவு செய்தார். அப்போது கனிமொழி பேசிக்கொண்டிருந்தபோது துணை சபாநாயகர், ``உங்கள் நேரம் முடிந்துவிட்டது'' என இந்தியில் கூறினார். அதற்கு கனிமொழி ``தயவு செய்து எனக்குப் புரியக்கூடிய மொழியில் பேசவும்'' என பதிலடிக் கொடுத்தார். கனிமொழியின் அந்த உரை பரவலாக பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதேநாளில் கம்யூனிஸ்ட் எம்பி டிகே ரங்கராஜன் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும், மசோதா தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும்... விவாதம் கேட்காமல் படிக்கிறீர்களே... என்ன அநியாயம் இது என ஒரு குரல் பொங்கி எழுந்து எதிர்ப்பு தெரிவித்தது. இடஒதுக்கீடு மசோதாவின் ஆதரவு குரல்களுக்கு இடையே சீறி வந்து எதிர்ப்பு தெரிவித்த அந்த குரல் திமுக எம்.பி கனிமொழியுடையது..
மிக சமீபத்தில்கூட சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் அந்தந்த மாநில மொழிகளிலோ அல்லது ஆங்கிலத்திலேயே பிரதமரால் அறிவிக்கப்படும் திட்டங்களின் பெயர்களை வைக்கலாமே எனவ மக்களவையில் கனிமொழி பேசினார். "ஆத்ம நிர்பார் பாரத் அபியான்" என்ற திட்டத்தின் பெயரை உச்சரிக்க சிரமப்பட்ட கனிமொழி நான் தமிழில் பேசுகிறேன்... உங்களுக்கு புரியுதா என்று சொல்லுங்கள் என சிரித்துக் கொண்டே சொன்னது பலரையும் ரசிக்க வைத்தது. அன்றைய தினத்தில் பலரது வாட்ஸ் ஆப் ஸ்டேடசாக கனிமொழியின் பேச்சு மாறியது.
நாடாளுமன்றத்தில் மகத்தான பங்காற்றியதற்காகவும், ஜனநாயகத்தின் மதிப்பீடுகள், கொள்கைகளுக்கு வலு சேர்த்ததாகவும் கூறி கனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது கடந்த 2018ம் ஆண்டு வழங்கப்பட்டது.
இரண்டுமுறை மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி முதன்முறையாக மக்களை சந்தித்து தேர்தலில் நின்று மக்களவைக்கு 2019ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னை எதிர்த்துப்போட்டியிட்ட தற்போதைய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திர ராஜனை விட மூன்றரை லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று அபார வெற்றி பெற்றார்.
இப்படியான கனிமொழிக்கு வாழ்க்கையில் துயர்ப் பக்கங்கள் இல்லாமல் இல்லை. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கனிமொழி மீதும் குற்றச்சாட்டப்பட்டது. கைது செய்யப்பட்டு 6 மாதம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டு மூன்று நாட்கள் கழித்துதான் சிறையில் சென்று சந்தித்தார் கருணாநிதி.. ஜாமினில் வெளியே வந்தபோதும் 7 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணைக்காக தனது மகனை விட்டு, குடும்பத்தைவிட்டு டெல்லியிலேயே பெரும்பாலான நேரத்தை செலவழிக்க நேர்ந்தது. 2ஜி ஏலத்தில் தவறு நடந்தது என்பதை உறுதிபடக் கூறும் ஆவணங்களை யாராவது கொண்டு வருவார்களா..? என 7 ஆண்டுகளாக காத்திருந்ததாக குறிப்பிட்ட நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு எதிராக உரிய ஆதாரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்தார். தீர்ப்பு வெளிவரும் அந்தநாளில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு கனிமொழி தனது தாயுடன் வருகை தந்திருந்தார். அப்போது தீர்ப்பு வருவதற்கு முன்பே கனிமொழி கருப்பு சிவப்பு நிற சாரியில் வந்திருந்தார். கனிமொழியின் அந்த நம்பிக்கையை பாராட்டதவர்கள் இல்லை எனச் சொல்லலாம்.
ஒருமுறை கனிமொழியிடம் மிகப் பெரிய அரசியல்வாதி நீங்க.. சமைப்பீங்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு என் அப்பா பெரிய அரசியல்வாதி, முதலமைச்சராக இருந்திருகிறார்.. ஆண் அரசியல்வாதிகளை பார்த்து இப்படியான கேள்விகள் எழுப்பப்படுவதில்லையே என ஆண் பெண் சமத்துவம் பற்றி ஒற்றை கேள்வியால் பதிலளித்தார். இப்படி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மேடைகள், தனது கவிதைகள் என எல்லாவற்றிலும் பெண்களுக்கான உரிமையை, பாலின சமத்துவத்தை பேசி வருகிறார் கனிமொழி.
கலைஞர் உயிரிழந்தபோது, அதிமுக ஆட்சி நடைபெற்று வந்ததால் அவரது உடல் அண்ணா சமாதியில் அடக்கம் செய்யப்படுமா?’ என்பது மிகப்பெரிய சந்தேகமாக இருந்தது. அது தொடர்பாக நீதிமன்றப்படியேறிய திமுகவுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்யலாம் என தீர்ப்பு வந்தபோது அதனைக் கேட்டு இரு கைகளையும் கூப்பி உடைந்தழுதார் ஸ்டாலின்... அப்போது கண் முழுக்க கண்ணீருடன் தனது அண்ணனை தாங்கிப் பிடித்த கனிமொழியின் அன்பை அவ்வளவு எளிதில் யாராலும் கடந்து விடமுடியாது.
கருணாநிதி தன் வாழ்நாளெல்லாம் எழுதிக் கொண்டே இருந்தவர். அப்படிப்பட்ட கருணாநிதியின் இறுதிச்ச்சடங்கில் எல்லாரும் மறந்த ஒன்றை செய்தார் கனிமொழியின் மகன் ஆதித்யா.. அவரது இறுதிச்சடங்கின்போது ஒரு அதிகாரியிடம் இருந்த ஒரு பேனாவைக் வாங்கிச்சென்று தனது தாத்தாவின் பாக்கெட்டில் வைத்தார். அந்த பேனாவின் வலிமை அந்த வாலிபனுக்கு தெரிந்திருக்கிறது.. ஏனென்றால் அவர் கனிமொழியின் வளர்ப்பு..
நாட்டுப்புற கலைகளை வளர்த்தெடுக்கவும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு உற்சாகமூட்டவும் ‘சென்னை சங்கமம்’ எனும் பெயரில் கலை நிகழ்ச்சிகள் கனிமொழியால் ஒருங்கிணைக்கப்பட்டு வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. பண்பாட்டு ரீதியில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக அது பார்க்கப்பட்டது.
இப்படி கலைஞரின் மகள், ஸ்டாலினின் தங்கை என்ற அடையாளத்தை தாண்டி கவிஞர், தேர்ந்த அரசியல்வாதி, அரசியல் தெளிவு, ஆங்கிலப்புலமை, பெண்ணியவாதி என பல்வேறு விஷயங்கள் கட்சிதாண்டி, அரசியல் தாண்டி பலரையும் கனிமொழியை ரசிக்க வைக்கிறது. நாடெங்கும் திராவிடப்புதல்வியாக பார்க்கப்படுகிறார்... பெண்கள் அரசியல் அரசியலுக்கு வருவதில் இந்தியாவில் பெரும் சவால்கள் இருந்திருக்கின்றன. அந்த சவால்களை வென்றுவந்த இந்திராகாந்தி, ஜெயலலிதா, மம்தா பானர்ஜி போன்றவர்களுக்கு அரசியல் மிகப்பெரிய அங்கீகாரத்தை அளித்திருக்கிறது. கனிமொழியும் தன் அரசியல் பயணத்தில் தனித்துவமான தடங்களை பதிப்பாரா என்பதை வருங்கால வரலாறு சொல்லும்!