Kanimozhi MP: "யாசகம் கேட்கவில்லை, உரிமைக்காக போராடுகிறோம்" - மகளிர் உரிமை மாநாட்டில் கர்ஜித்த கனிமொழி
சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் தி.மு.க.வின் மகளிர் உரிமை மாநாட்டில் சோனியாகாந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
மகளிர் உரிமை மாநாடு:
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட மாநாட்டில், மகளிர் அணி செயலாளர் கனிமொழி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.
"நூற்றாண்டு கால வரலாறு"
பின்னர், இக்கூட்டத்தில் பேசிய கனிமொழி, ”அறிவொளி பெற்ற தீபங்களாக இந்த மாநாட்டில் மகளிர் அணியை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். மகளிர் உரிமை மாநாட்டுக்கு நூற்றாண்டு கால வரலாறு உண்டு. இந்த சமூகத்தில் பேசக்கூடிய அனைவருக்கும் குறிப்பிட்டு சொல்வார்கள் ஒரு பெண்ணுக்கு ஆண் தான் பாதுகாப்பு. இந்தியாவிலேயே முதல் முறையாய் பெண்களை காவலர்கள் ஆக்கி ஆண்களுக்கு பாதுகாப்பாக பெண்களை ஆக்கியவர் கலைஞர். 11 பெண் மேயர்கள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. படிக்கும் ஆர்வமுள்ள பெண்களுக்கு திமுக அரசு நிதி கொடுத்து உதவி வருகிறது” என்றார்.
”மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் ஆகாது"
தொடர்ந்து பேசிய அவர், ”மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மத்தியில் இருக்கும் பாஜக அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்த மசோதா 50 ஆண்டுகள் ஆனாலும் நடைமுறைக்கு வராது. தேர்தலுக்காக பெண்களை ஏமாற்றி வருகிறது பாஜக. மத்தியில் இருக்கக் கூடிய பாஜக ஆட்சியில் எந்த பெண்ணுக்காவது பாதுகாப்பு இருக்கிறதா? இதற்கு எடுத்துக்காட்டு மணிப்பூர் கலவரம். மணிப்பூரில் பெண்களுக்கு மிகப்பெரிய அளவில் கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ளது. நாட்டில் யாருக்குமே பாதுகாப்பில்லாத ஒரு நிலையை பாஜக ஆட்சி ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் ஒதுக்கப்படுகிறார்கள். நாங்கள் யாசகம் கேட்கவில்லை. உரிமைக்காக போராடுகிறோம்.
மதக் கலவரங்கள், காழ்ப்புணர்வு அரசியல், வெறுப்பு அரசியல் என்று வரும்போது பெண்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். புதுச்சேரியில் பட்டியலின பெண் என்பதால், அமைச்சரே ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. ஒடுக்கப்பட்ட சமூக பெண் என்பதால் குடியரசுத் தலைவரே அவமதிக்கப்படுகிறார். குடியரசு தலைவர் , விளையாட்டு வீராங்கனைகள் , பெண் அமைச்சர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை தான் மத்தியில் உள்ள பாஜக ஆட்சி உருவாக்கி உள்ளது.
மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் பெண்களுக்கு பங்கு இல்லை. தமிழ்நாட்டிலே பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்லும் மாநிலம் தமிழ்நாடு தான். 43 சதவீதம் பேர் வேலைக்கு செல்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, இந்த நாட்டில் 15 சதவீதம் பெண்கள் வேலைக்குச் செல்லும் வாய்ப்பு இருந்தது. இப்போது, 8 சதவீதமாக குறைந்துவிட்டது. இதை தான் மத்தியில் உள்ள பாஜக செய்கிறது" என்றார் கனிமொழி.