பரிந்துரை செய்த திமுக எம்.பி., ‛பாஸ்’ செய்த பிரதமர்... நெகிழ்ந்து போன காஞ்சி விவசாயி!
திமுக எம்பி டி ஆர் பாலு பரிந்துரையின் பேரில் விண்ணப்பித்த ஒரு மாதத்திலேயே நிதி உதவி அளித்த பிரதமர் மோடிக்கு விவசாயி குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா, சுங்குவார்சத்திரம் அடுத்துள்ள சந்த வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் லோகநாதன் - கிருஷ்ணவேணி தம்பதியினர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர்களின் மூன்றாவது மகன் தாமரைக்கனி வயது 25, டிப்ளமோ படித்துவிட்டு எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மே மாதம் திடீரென மயங்கி விழுந்த நிலையில் காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு உள்ளனர். ஆனால் சிகிச்சை பலன் இல்லாத காரணத்தால் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு பல்வேறு வித பரிசோதனைகளை மேற்கொண்ட நிலையில் தாமரைக்கனி ரத்தப் புற்றுநோய் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக பல லட்சங்கள் செலவு செய்த நிலையில் சிகிச்சையைத் தொடர முடியாமல் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து அறிந்த உள்ளூர் திமுக நிர்வாகியான கோதண்டன் என்பவர் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியின் எம்பியாக உள்ள திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டிஆர் பாலுவிடம் அழைத்து சென்று உதவி கேட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து திமுக எம்பி டி ஆர் பாலு விவசாயியின் மகனான தாமரை கனியின் புற்றுநோய் சிகிச்சைக்காக பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து உதவிடுமாறு கடந்த செப்டம்பர் மாதம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார்.இதனை விவசாயியான லோகநாதன் பிரதமர் அலுவலகத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் டிஆர் பாலுவின் பரிந்துரையையும், விவசாயின் வேண்டுகோளையும் ஏற்று பிரதமர் மோடி, புற்றுநோய் சிகிச்சைக்காக 3 லட்சம் நிதி உதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் டி.ஆர் பாலு எம்பிக்கும், விவசாயி லோகநாதனுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.கடிதத்தில் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தாமரைக்கனிக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக ரூபாய் 3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வழங்கப்படும் என்றும்,சிகிச்சை முடிந்த பின்னர் உரிய ஆவணங்களின் நகலை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், ஆவணங்கள் கிடைத்த பின்னர் உதவி தொகையானது உடனடியாக வேலூர் சிஎம்சி மருத்துவமனை அனுப்பி வைக்கப்படும் என்று பிரதமர் அலுவலக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நிதி ஒதுக்கீடு செய்து அனுப்பிய கடிதம் கிடைத்துள்ள நிலையில் விவசாயி லோகநாதன் குடும்பத்தினர் ஓரளவு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விண்ணப்பித்த ஒரு மாத காலத்திலேயே சிகிச்சைக்காக தொகையினை ஒதுக்கீடு செய்த பாரத பிரதமர் மோடி அவர்களுக்கும், பரிந்துரை செய்த டி ஆர் பாலு எம்பி அவர்களுக்கும் விவசாயி குடும்பத்தினர் தங்களது நன்றியினை தெரிவித்து உள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.