கள்ளக்குறிச்சி: கோயில் நிலத்தை குத்தகை எடுத்து ஆட்சியர் அலுவலகம் கட்ட உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
’’கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் வளாகம் கட்டுவதற்கும், நிலத்தை மதிப்பீடு செய்ய மதிப்பீட்டாளர்களை நியமித்த உத்தரவுக்கும் இடைக்கால தடை''
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்துக்கான ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் கட்ட, வீரசோழபுரத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்தநிலத்துக்காக அறநிலையத் துறைக்கு இழப்பீடாக 1.98 கோடி வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் மாவட்ட ஆட்சியர் வளாகம் கட்டஎதிர்ப்பு தெரிவித்து, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, கோயில் நிலத்தை கையகப்படுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் கட்ட இடைக்கால தடை விதித்தது.
அதன்பிறகு அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் நிலத்தை குத்தகை அடிப்படையில் எடுத்து முறையாக மதிப்பீடு செய்து இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், அதன்பிறகு அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் கட்டலாம் எனவும் கடந்த பிப்ரவரியில் அனுமதி அளித்தனர். இதனிடையே, தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பரில் இரண்டாவதாக பிறப்பித்த அரசாணையில், அந்த நிலத்தின் மதிப்பு ரூ.12.89 கோடி என்றும், அதற்கு மாத வாடகையாக ரூ.1.3 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது. ஆனால், உரிய மதிப்பீட்டாளர்களை நியமித்து அந்த நிலத்தை மதிப்பீடு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் வளாகம் கட்ட அனுமதி அளித்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆனந்த் பத்மநாபன் ஆஜராகி, இந்துமத சட்டத்துக்கு விரோதமாக கோயில் நிலங்களை அரசாங்கம் இவ்வாறு கையகப்படுத்தக் கூடாது. கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மாவட்ட ஆட்சியர் வளாகம் அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது சட்டவிரோதமானது. இந்த விவகாரத்தை உயர்நீதிமன்றம் முறையாக கையாளவில்லை.
அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் இருக்கும்போது கோயில் நிலத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் வளாகம், நீதிமன்றம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டப்பட்டு விட்டால் அதை மீட்பது என்பது இயலாத காரியம். எனவே, இதுதொடர்பான உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். அதையடுத்து நீதிபதிகள், கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் வளாகம் கட்டுவதற்கும், நிலத்தை மதிப்பீடு செய்ய மதிப்பீட்டாளர்களை நியமித்த உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்தனர். பின்னர் இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்துள்ள நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.