TVK Leader Vijay: இதுதான் முதன்முறை! அரசியலுக்கு வந்த பிறகு மக்களைச் சந்தித்த நடிகர் விஜய்..
அரசியல் கட்சி தொடங்கிய பிறகு நடிகர் விஜய் முதன்முறையாக இன்று மக்களை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். முன்னணி நடிகராக உலா வரும் இவர் கடந்த சில ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதற்கான பணிகளை முன்னெடுத்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
அரசியல் தலைவரான விஜய்:
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, ரசிகர்களை திரட்டி பொதுக்கூட்டம் நடத்தாமல் மிகவும் அமைதியாக தனது சமூக வலைதள பக்கத்தில் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்தார். அரசியலுக்கு வருகை தந்த பிறகு நடிகர் விஜய், தமிழக அரசியலில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அவரது கட்சி நிர்வாகிகளும், அவரது ரசிகர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அரசியல் கட்சி தொடங்கி சில மாதங்களாகியும் நடிகர் விஜய் பெரியளவில் எந்த ஒரு பரபரப்பான அறிக்கையையோ, செயல்பாடுகளையோ வெளிப்படுத்தவில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல் தலைவர்களுக்கு வாழ்த்துகளை மட்டுமே பகிர்ந்து வந்தார். இதையடுத்து, வாழ்த்து அரசியலைத் தவிர வேறு ஏதேனும் அரசியல் இருந்தால் செய்யுங்கள் என்று பலரும் அவரை விமர்சிக்கத் தொடங்கினர்.
களத்திற்கு வந்த தளபதி:
இந்த சூழலில்தான், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் நேரில் சென்று சந்தித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
இந்த பரபரப்பான சூழலில், தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய் இன்று கள்ளக்குறிச்சிக்கு சென்றார். அங்கு அவர் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கே நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும், மருத்துவர்களிடமும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அரசியல் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் பெரியளவில் கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்த விஜய், அரசியல் கட்சி தொடங்கிய பிறகு முதன்முறையாக இன்று மக்களைச் சந்தித்துள்ளார்.
இனி அடிக்கடி களத்திற்கு வருவாரா?
கோட் படம், அதன் பின்பு ஒரு படம் என இந்த இரண்டு படங்களுக்கு பிறகு முழுமையாக அரசியலில் ஈடுபட உள்ளதாக ஏற்கனவே விஜய் அறிவித்துள்ள நிலையில், அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகளே இருப்பதால் நடிகர் விஜய்யை இனி தீவிர அரசியல் களத்தில் காணலாம் என்றும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்கான இடம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மேலும், கட்சியை வலுப்படுத்துவதற்காக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்தந்த மாவட்ட நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து பேசி வருகின்றனர்.