உங்களுக்கும் மாதம் ரூ.1000 வேண்டுமா...? உடனே இதை செய்யுங்கள்... முதல்வர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் கூடுதல் பயனாளிகளை சேர்க்க விதிமுறை தளர்வு - முதல்வர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் கூடுதல் பயனாளிகளை சேர்க்க விதிமுறை தளர்வு செய்யப்பட்டுள்ளது என அரசு அறிவித்துள்ளது.
கலைஞர் உரிமைத் தொகை திட்டம்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாகப் பெயரிட்டுள்ளனர். ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்க திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் 2023 செப்டம்பர் 15 ஆம் நாள் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கா. ந. அண்ணாதுரையின் பிறந்த நாளில் மு. க. ஸ்டாலினால் துவக்கிவைக்கப்பட்டது.
கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் உள்ள விதிமுறைகளில் விலக்கு
பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், கூடுதல் பயனாளிகளை சேர்ப்பதற்காக, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி, 2023 செப்டம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை திட்டத் தின் கீழ், பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சேர்வதற்கு, 1.63 கோடி பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்ய பல்வேறு விதிமுறைகளை விதித்திருந்தது தமிழக அரசு.
அதாவது, ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், வருமான வரி தாக்கல் செய்வோர், மாநில, மத்திய அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், உள்ளாட்சி, கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்.
சொந்த பயன்பாட்டுக்கு, கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனம் வைத்திருப்போர், ஆண்டுக்கு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்து ஜி.எஸ்.டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள், ஏற்கனவே ஓய்வூதியம் மற்றும் அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன் பெறதகுதி இல்லாதவர்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தகுதி இல்லாதவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 1.06 கோடி பேருக்கு மட்டுமே உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் அதிருப்தி அடைந்தனர். நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, புதிதாக 90,000 பேருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது. தற்போது 1.15 கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.
2026 ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், விடுபட்ட பெண்கள் அனைவருக்கும், மகளிர் உரிமைத்தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளை தேர்வு செய்வதற்கான விதிமுறைகளில் தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, மாற்று திறனாளிகள் உதவி தொகை பெறும் குடும்ப பெண்கள்; இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய முதியோர் ஓய்வூதியம், அரசு ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத பெண்கள், உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்கள், திட்ட தகுதிகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களாக கருதப்படுவர். இதற்கான அரசாணையை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை செயலர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.
திட்டத்திற்கான விதிகளில், விலக்கு அறிவிக்கப்பட்டு உள்ளதால், ஏற்கனவே விண்ணப்பம் அளித்து நிராகரிக்கப்பட்ட, 48 லட்சம் பேருக்கு, மகளிர் உரிமை தொகை கிடைக்க உள்ளது. அத்துடன், புதிதாக ரேஷன் அட்டை பெற்றுள்ளோரும், உரிமைத் தொகை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயனாளிகள் சேர்க்கை விரைவில் துவக்கப்பட உள்ளது.




















