Magalir Urimai Thogai: கரூரில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு ஏடிஎம் அட்டைகளை வழங்கிய ஆட்சியர்
கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெற்ற விழா நிகழ்வில் பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்கள்.
கரூரில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை(ATM Card) வழங்கினார்.
கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெற்ற விழா நிகழ்வில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை (ATM Card) கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி) சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: முன்னாள் முதல்வர் அண்ணா அவர்களுடைய பிறந்த நாளான அன்று நம்முடைய நாட்டிலேயே முன்னோடி திட்டமாக கலைஞர் மகளிர் உரிமை திட்டம் திட்டத்தை தொடங்கி வைக்கும் விழாவில் பங்கேற்பதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகத் தெளிவாக இந்த திட்டத்தின் நோக்கத்தை கூறியிருக்கிறார். ஒரு தொகையாக வழங்காமல் மகளிருக்கான உரிமையாக அங்கீகரித்து வழங்கக்கூடிய இந்த திட்டம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க திட்டமாகும்.
உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறேன். உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். உண்மையிலேயே இந்த முன்னோடி திட்டத்தை சிந்தித்து செயல்படுத்தி இருக்கும் நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நாம் கண்டிப்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்ள வேண்டும். கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே இதற்காக அதிகமாக திட்டமிட்டு பொது மக்களுக்கு எந்த வித சிரமமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நம்முடைய மாநிலம் முழுவதும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் தலைமை செயலாளர் வழிகாட்டுதலின்படி நாங்கள் அதை செய்தோம் நம்முடைய மாவட்டத்தில் குறிப்பாக நம்முடைய அரசு அலுவலர்கள் குறிப்பாக மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில் சிறப்பாக பணிகள் மேற்கொண்டுள்ளார்கள்.
சிறப்பு துணைஆட்சியர் அவர்கள் அவர்களுடைய தலைமையில் நம்முடைய மாவட்ட நிர்வாகம் முழுவதும் இந்த பணிகளை மிகச் சிறப்பாக மேற்கொண்டனர். மற்றபடி இந்த தொகை மாதம், மாதம் உங்களுடைய வங்கிக் கணக்கில் வந்து சேரும். நீங்கள் கொடுத்திருக்கக்கூடிய வங்கி கணக்கில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் செலுத்தப்படும் தொடர்ந்து கண்காணித்து அந்த பணத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பெற்ற பயனாளிகள்அனைவரையும் வாழ்த்துகிறேன் இது ஒரு மிகச்சிறந்த தொடக்கம் அனைவருடைய குடும்பங்களும் வளம் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்கள்.
தொடர்ந்து சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஏற்றுக்கொள்ள நாடாளு மன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினார்கள் குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், கரூர் மாநகராட்சி மேயர், துணை மேயர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக் கொண்டார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் திரு.கந்தராஜா, மகளிர் திட்ட இயக்குநர் சீனிவாசன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேன்மொழி, மண்டல தலைவர்கள் சக்திவேல், கனகராஜ், முதன்மை மண்டல மேலாளர் இந்தியன் ஒவர்சீஸ் வங்கி V.D.பாணி, மாவட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் திரு.ராஜ்குமார், தனித்துணை ஆட்சியர்(சபாதி)சைபுதீன், வருவாய் கோட்டாட்சியர்கள் ரூபினா(கரூர்), கருணாகரன்(குளித்தலை), மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.