Magalir Urimai Thogai: மொபைலும் கையுமா இருங்க! வங்கி கணக்குக்கு வருகிறது ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை!
Kalaignar Magalir Urimai Scheme: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் நாளை தொடங்க இருக்கும் நிலையில் இன்று முதலே மகளிர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
மகளிருக்கான உரிமைத்தொகை ரூ 1000 பயனாளர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் வரும் 15-ம் தேதி அதாவது நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளது. அன்றைய தினமே தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பயனாளர்களுக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் ,மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தகுதியான பயனாளர்களை திட்டத்தில் இணைப்பதற்கான பணிகள் அரசு சார்பில் வேகமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட முகாம் ஜுலை 24ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 14 தேதி வரை நடைபெற்றது. இந்த முகாம்களின் மூலம் மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் திட்டத்தில் இணைய 1.54 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மாதம்தோறும் உரிமைத் தொகை, குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். வங்கி கணக்கு இல்லாத பயனாளிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு ரூபே ஏடிஎம் கார்டு வழங்கப்பட உள்ளது. இந்த கார்டு மூலம் உரிமைத் தொகை பணத்தை குடும்பத் தலைவிகள் எடுத்துக் கொள்ள முடியும். ஏடிஎம் கார்டுகளை ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் மாதம்தோறும் 1-ம் தேதி உரிமை தொகை வங்கி கணக்குக்கு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, இத்திட்டத்தில் தகுதியான பயனாளர்களின் எண்ணிக்கை 1 கோடிக்கும் அதிகமாக உள்ள நிலையில் இறுதிக்கட்ட ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இது தொடர்பான முதலமைச்சரின் அறிக்கையில். “இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. தகுதியுள்ளவர்கள் என நாம் தேர்ந்தெடுத்துள்ளது 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர். அப்படியானால் மற்றவர்களது கோரிக்கைகள் ஏன் ஏற்கப்படவில்லை என்பதை நாம் அவர்களுக்குச் சொல்லியாக வேண்டும். எந்த அடிப்படையில் உங்களது கோரிக்கையை எங்களால் ஏற்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியாக வேண்டும். அப்படி அனுப்பினால் பெரும்பாலானவர்கள் மனநிறைவு அடைவார்கள்.
சிலருக்கு சந்தேகங்கள் இருக்கலாம் மறுபடியும் நம்மிடம் விண்ணப்பிப்பார்கள். அவர்களுக்கும் அத்தகைய வாய்ப்பை நாம் வழங்க வேண்டும். வாய்ப்பை வழங்கினால் பொதுமக்களுக்கு அரசின் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
நாளை இந்த திட்டம் தொடங்க இருக்கும் நிலையில், இன்று முதலே மகளிருக்கு அவர்களது வங்கிக் கணக்கில் ரூ. 1000 செலுத்தப்பட்டு வருகிறது. சென்னை சேலம் ஆகிய பகுதிகளில் இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.