Ponmudi Case: பொன்முடி வழக்கை யார் விசாரிக்க போகிறார்? நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சொல்லப்போவது என்ன?
பொன்முடி மீதான சுயோ மோட்டோ வழக்கை எந்த நீதிபதி விசாரிப்பது என்பது குறித்து இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை தாமாக முன்வந்து மறு ஆய்வுக்கு எடுத்த வழக்கை விசாரிக்க கூடாது என்கிற லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் அமைச்சர் பொன்முடி ஆகியோரின் கோரிக்கை மீதான தனது முடிவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று அறிவிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வழக்கு பின்னணி என்ன?
2006ஆம் திமுக ஆட்சியில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் சூப்பிரண்டு கன்னியப்பன் இந்த வழக்கைத் விசாரித்து வந்தார். இந்த வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் ரூ.1.36 கோடிக்கு மேல் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களைக் குவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
2015ஆம் ஆண்டு முதல் விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பல கட்டங்களாக விசாரணை நடைபெற்ற நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி தனது மனைவியுடன் நீதிமன்றத்தில் தீர்ப்பு நாளன்று ஆஜரானார். சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியையும் அவரது மனைவி விசாலாட்சியையும் விடுதலை செய்வதாகவும், போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், வழக்கில் முகாந்திரம் இல்லை எனவும் கூறி , அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவியும் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை ஆகஸ்ட் 10ஆம் தேதி விசாரணைக்கு எடுத்திருந்தார்.
இந்த வழக்கு செப்டம்பர் 7ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், நீதிமன்றம் மாற்றம் தொடர்பான உயர்நீதிமன்ற நிர்வாக உத்தரவு குறித்து, வழக்கில் பதிவுத்துறையை சேர்த்து, விளக்கத்தை கேட்டிருக்க வேண்டும் என்றும், லஞ்ச ஒழிப்புத் துறையின் விளக்கத்தையும் கேட்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்கும் வழக்குகளை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து, அதை வேறு நீதிபதி தான் விசாரிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.
பொன்முடி தரப்பில் விழுப்புரத்திலிருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றிய உயர்நீதிமன்ற நிர்வாக முடிவுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தாமாக முன்வந்து எடுத்த மறு ஆய்வு மனுவை வேறு நீதிபதி விசாரிப்பது தான் நடைமுறை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து எடுத்த வழக்கை தானே விசாரிப்பதா? அல்லது வேறு நீதிபதிக்கு மாற்றுவதா என்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுப்பதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி இந்த வழக்கு அவரது பட்டியலில் 127வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. இன்று மதியம் 2 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் பொன்முடி வழக்கை தானே விசாரிக்கப் போகிறாரா அல்லது வேறு நீதிபதி விசாரிக்க பரிந்துரைக்க போகிறாரா என்பது குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.