Jayalalithaa Death Probe: சிசிடிவி கேமராக்களை நான் அகற்ற சொல்லவில்லை: விசாரணையில் போட்டு உடைத்த ஓபிஎஸ்!
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா, சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு பிறகு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் இன்று ஆஜரானார். அப்பொழுது, அப்போலோ மருத்துவமனையில் சிசிடிவி இல்லாதது குறித்து கேள்வி எழுப்பியது.
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் சிசிடிவிக்களை அகற்றுமாறு கூறவில்லை. தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சராக பொறுப்பு ஏற்றது வரை நான் அளித்த பேட்டிகள் அனைத்தும் சரியானதே என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொடர்ந்து, நோயின் தன்மையை பொறுத்து வெளிநாடுகளுக்கு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களிடம் சிசிக்சை அளிக்க அரசியல் பிரபலங்களை உயர்சிகிச்சைக்காக அழைத்து செல்வது தவறு இல்லை என்றும், சசிகலாவின் அழைப்பிதழ் பெயரில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்க வந்த அமெரிக்க மருத்துவர் சமின் சர்மா, ஆஞ்சியோகிராபி சிகிச்சை அளிக்க கூறிய நிலையில், அவர் எந்த சிகிச்சையும் அளிக்காமல் சென்றது தொடர்பான விவரங்கள் எதுவும் எனக்கு தெரியாது என்று ஓ.பி.எஸ். வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். அவருடைய மரணத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக சில கேள்வி எழுப்பியதை தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்க ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. இது ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், சசிகலா மற்றும் அவருடைய உறவினர்கள் உள்பட பலரையும் விசாரித்தது. எனினும் தற்போது வரை இந்த ஆணையம் விசாரணையை முடிக்கவில்லை. இந்த ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு கொண்டு வந்தது.
இந்நிலையில், ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடந்த 12ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. பல முறை ஆணையம் ஓபிஎஸ்க்கு சம்மன் அனுப்பியும் அவர் ஒரு முறை கூட நேரில் ஆஜராகமல் இருந்தார். இதுவரை 8 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத அவர், 9வது முறையாக அனுப்பப்பட்ட பிறகு இன்று நேரில் ஆஜராகி இருக்கிறார்.
முதல்முறையாக ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடைபெறுவதால், பல தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் மத்தியில் அல்லது இறுதியில் விசாரணை முடிவடைந்து 3-4 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்