Jayakumar : அதிமுக ஒரு ஆலமரம்.. அந்த நிழலுக்கு பல கட்சிகள் வரும்.. பாஜக முடிவு குறித்து ஜெயக்குமார் பேட்டி!
வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. அது பாஜக கட்சி எடுத்த முடிவு. இதில், நாங்கள் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை - அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார்
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.
அதிமுக-பாஜக இடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மூன்றரை மணி நேரத்திற்கு மேலாக கடந்த ஞாயிற்றுகிழமை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது, பேசிய அவர், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை அதிமுகவுடன் நடைபெற்றது. ஆனால் அதிமுக பெரிய கட்சி என்பதால் எங்களுடைய கோரிக்கையை அவர்களால் முழுவதுமாக நிறைவு செய்ய முடியவில்லை. ஆகவே இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. அதிமுக-பாஜக கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து இருக்கிறோம். ஆனால் இந்த உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் தனியாக போட்டியிடுகிறோம். பாஜகவின் கட்சி வளர்ச்சிக்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. தேசிய அளவில் பாஜக-அதிமுக கூட்டணி தொடரும்.
தாமரை மலர வேண்டும். தொண்டர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும். அதிமுகவுடனான நல்லுறவு தொடரும். தனித்து போட்டியிடுவது கடினமான முடிவு இல்லை. இது கட்சியின் வளர்ச்சிக்கு உதவும்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 10 சதவீத இடங்களை ஒதுக்குவதாக அதிமுக முதற்கட்ட பேச்சுவார்த்தையில் தெரிவித்தது. ஆனால் அதைவிட அதிக இடங்களில் போட்டியிட பாஜக விரும்புகிறது.” என தெரிவித்தார்.
இந்தநிலையில், பாஜக கூட்டணியில் இருந்து விலகியது தொடர்பாக அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு என்று ஒன்று இருக்கும். அவைகளில் கட்சி மற்றும் கட்சியின் தொண்டர்கள் கருத்து மிக முக்கிய பார்க்கப்படுகிறது. எங்கள் கட்சி மற்றும் கட்சியின் தொண்டர்களில் நிலையை முதலில் நாங்கள் பார்க்க வேண்டும் என்றும்,பாஜக கேட்கும் இடங்களை எங்களால் தர முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம்.
அதன் காரணமாகவே, வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. அது பாஜக கட்சி எடுத்த முடிவு. இதில், நாங்கள் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை. ஏற்கனவே, அதிமுக கட்சி பல்வேறு தேர்தல்களில் தனித்து போட்டியிட்டுள்ளது. வெற்றியும் பெற்றுள்ளது. அதேபோல், இந்த தேர்தலிலும் அதிமுக தனித்தன்மையுடனும், அடையாளத்துடன் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்றார்.
மேலும், 1977 இல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அதிமுக கட்சி தனித்து நின்றது. அதேபோல், கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலிலும் அதிமுக தனித்து நின்றது. எனவே, அதிமுக என்பது மிகப்பெரிய இயக்கம். அது ஒரு ஆலமரம். ஆலமரத்தின் கீழ் நிழலில் நின்றவர்களே அதிகம். அதேபோல் அதிமுக கட்சியின்கீழ் பலன் அடைந்த எத்தனையோ கட்சிகள் பலனடைந்துள்ளனர். வரலாறுகளை எடுத்து பார்த்தால் 1977 மற்றும் 2016 ம் ஆண்டு தனித்து நின்றே அதிமுக வெற்றி பெற்றது. பிரதான கட்சியான அதிமுக 75 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் பொங்கலுக்கு 2 ஆயிரம் வழங்கினோம். முன்னாள் முதலமைச்சர் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5. % இடஒதுக்கீடு கொண்டு வந்து பல்வேறு ஏழை மாணவர்கள் எம்.பி.பி.எஸ் பயில முடிகிறது.இதுபோன்ற எங்கள் சாதனைகளை மக்களுக்கு தெரிவித்து மகத்தான வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்