கரூரில் ஜல்லிக்கட்டு போட்டி - அனுமதி கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
தமிழர் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்க கோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திருமலை கிராமத்தில் கடந்த 60 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது.

கரூரில் தமிழர் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்க கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கரூர் மாவட்டம், தோகமலை அடுத்த ராச்சாண்டார் திருமலை கிராமத்தில் கடந்த 60 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 61ஆம் ஆண்டாக வருகின்ற ஜனவரி 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி வழங்க கோரி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக மனு அளித்துள்ளனர்.

கரூர் மட்டுமின்றி திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட 10 அண்டை மாவட்டங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாடுகள் போட்டியில் பங்கு பெற உள்ளன. அரசு விதிமுறைகள் படி போட்டியை நடத்த அனுமதி வழங்க கோரி மனு அளித்துள்ளனர்.
வெறி நாய் பாதிக்கப்பட்ட நாய்களை அடையாளம் காண்பது எப்படி?
கடவூர் அருகே பாலவிடுதி அரசு மேல்நிலைப்பள்ளியில் வெறி நோய் பாதிக்கப்பட்ட நாய்களை அடையாளம் காண்பது எப்படி என்பது குறித்த வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றிய பகுதிகளில் தமிழக அரசின் வழிகாட்டிகள் படி மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவை அடுத்து கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் பாலவிடுதி ஊராட்சி, பாலவிடுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை வகித்தார். மூத்த கால்நடை மருத்துவ அலுவலர்கள், உமாசங்கர், கன்னியப்பன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கால்நடை துறையின் உதவி மருத்துவ அலுவலர்கள் பிரேம்குமார், செந்தில், மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார். இதில் வெறிநோய் பரவும் முறைகள் நோய் கிருமியின் தன்மைகள் வெறிநோய் பாதிக்கப்பட்ட நாய்களை அடையாளம் காண்பது எப்படி, ஊமைத்தனமாக வெறி நாய் கடித்த உடன் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், தடுப்பூசியின் முக்கியத்துவம் செல்லப்பிராணிகளின் வெறி நோய் தடுப்பூசி அட்டவணைகள் மனிதர்களுக்கு தடுப்பூசி கடித்த நாய்களுக்கான சிகிச்சை முறைகள், வெறி நோய் தடுப்பு முறைகள் என்று பல்வேறு தலைப்புகளில் ஆலோசனைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் தீபா, மகேஸ்வரன் உதவியாளர் சரவணன் உள்பட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
எஸ். பி அலுவலகத்தில் குறைதீர் முகாம்.
கரூர் எஸ். பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடக்கிறது. இது குறித்து எஸ் பி அலுவலக செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது. கரூர் எஸ் பி அலுவலகத்தில் மாதந்தோறும் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்து வருகிறது. அதன்படி நடப்பு டிசம்பர் மாதத்தில் குறைத்தீர் முகாம் எஸ்பி சுந்தர வதனம் தலைமையில் நடக்கிறது. இதில் ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், பங்கேற்க உள்ளனர். எனவே, பொதுமக்கள் முகாமில் தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





















