(Source: ECI/ABP News/ABP Majha)
Vijayakanth: என் கணவருக்கு வாழ்க்கை கொடுத்தவர் விஜயகாந்த்; கடவுளைப் போன்றவர்- ரோஜா நெகிழ்ச்சி
என் கணவன் செல்வமணி மிகவும் அப்செட் ஆகிவிட்டார். இரண்டு நாட்களாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு விட்டார். இன்றுதான் அவரை வெளியே அழைத்துப் போகிறேன்.
என் கணவருக்கு வாழ்க்கை கொடுத்தவர் விஜயகாந்த், எங்களுக்கு அவர் கடவுளைப் போன்றவர் என்று ஆந்திர அமைச்சர் ரோஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு பற்றியும், விஜயகாந்துடனான நினைவுகள் பற்றியும் திரை பிரபலங்கள் நேர்காணல்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா செல்வமணி, விஜயகாந்த் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசி உள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ''எங்கள் யாராலுமே விஜயகாந்தின் இறப்பை ஜீரணிக்கவே முடியவில்லை. அவர் ஒரு நல்ல நடிகர், நல்ல தலைவர். சமூக சேவைக்கு முக்கியத்துவம் கொடுப்பார். படிக்க நினைத்து காசு இல்லாதவர்களைப் படிக்க வைப்பார்.
மிகச் சிறந்த நடிகரில் ஒருவர் விஜயகாந்த்
நான் பார்த்த நடிகர்களிலேயே மிகச் சிறந்த நடிகரில் ஒருவர் விஜயகாந்த். என் கணவன் செல்வமணி மிகவும் அப்செட் ஆகிவிட்டார். இரண்டு நாட்களாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு விட்டார். இன்றுதான் அவரை வெளியே அழைத்துப் போகிறேன்.
கடவுளைப் போன்றவர்
என் கணவருக்கு வாழ்க்கை கொடுத்தவர் விஜயகாந்த், எங்களுக்கு அவர் கடவுளைப் போன்றவர். புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் ஆகிய இரு படங்களையும் என் கணவர் செல்வமணி இயக்க, விஜயகாந்த் நடித்தார். கேப்டன் பிரபாகரன் படத்தால், நடிகராக விஜயகாந்துக்கு எவ்வளவு பெயர் கிடைத்ததோ, அதை விட அதிகமாக ஓர் இயக்குநராக செல்வமணிக்கு உலகம் முழுவதும் பெயர் கிடைத்தது'' என்று ரோஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கேப்டன் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. நேற்று விஜயகாந்தை இறுதியாக ஒருமுறை காண தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் சென்னையை நோக்கி வந்தனர். அலை கடலென மக்கள் திரண்டு வந்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
நேற்று மாலை அடக்கம்
முதலில் சென்னை, தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து நேற்று (டிச.29) மதியம் 2 மணிக்கு, விஜயகாந்தின் உடல் மீண்டும் தேமுதிக அலுவலகத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. கோயம்பேடு ஜவஹர்லால் நேரு சாலையில் உள்ள அவரது கட்சி அலுவலக வளாகத்தில் மாலை 7.07 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.