இனிமேல் தான் உதயா என்ற நண்பன், உதயநிதி ஸ்டாலின் என்ற பெயரை.... நடிகர் விஷால் கூறியது என்ன?
நடிகர் விஜயகாந்தின் பெயர் நடிகர் சங்க கட்டிடத்தில் நிச்சயம் இடம்பெறும், அதுதொடர்பாக அனைத்து நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுப்போம்.
சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடிகர் விஷால் மற்றும் லத்தி பட குழுவினர் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக திரைப்பட நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, "உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகும் தருணத்தை கடந்த 9 ஆண்டுகளாக நேரில் பார்க்கவேண்டும் என்ற கனவாக இருந்தது. தற்பொழுது அமைச்சராவதை நேரில் பார்க்கும் பொழுது நண்பனாக மகிழ்ச்சி அடைகிறேன். இனிமேல் தான் உதயா என்ற நண்பன், உதயநிதி ஸ்டாலின் என்ற பெயரை அனைத்து இடங்களிலும் பயன்படுத்த போகிறார். முதல்வரின் மகன் என்று, எந்த இடத்திலுமே பெயரை பயன்படுத்தாமல் தனது தனிப்பட்ட முறையில், தந்தையின் பெயரை பயன்படுத்தாமல் செயல்பட்டவர். தந்தை மற்றும் மகன் இருவரின் பேரும் இணைந்து உதயநிதி ஸ்டாலின் எனும் நான் என பதவியேற்கும் உதயாவிற்கு வாழ்த்துக்கள்.
எனது நண்பர்கள் வட்டாரத்தில் மற்றொருவர் அமைச்சராவது மகிழ்ச்சியடைகிறேன். தகுதியானவர்கள் தான் அமைச்சராகவர்கள், வாரிசு அரசியல் என்பது மேலோட்டமாக தெரியுமே தவிர, அந்தத் துறைக்கு தகுந்தவர் தான் அமைச்சராக இருப்பார் என்பதால் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுத்திருப்பார் என்று தான் கருதுகிறேன் . உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதை தலைவர்கள் வரவேற்பார்கள் நம்புகிறேன். உதயநிதி முயற்சி, அணுகுமுறை, தேர்தலுக்கு முன், தேர்தலுக்குப் பின் எப்படி செயல்படுகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அவரது பேச்சாலும், செயல்பாட்டாலும் அமைச்சருக்கான தகுதி உள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், “ஆன்லைன் ரம்மி சூதாட்டம் குறித்து பேசுவதற்கு என் மீது வழக்கு தொடர்ந்தாலும் பரவாயில்லை வெளிப்படையாக சொல்கிறேன். ஆன்லைன் ரம்மி விளையாட்டால் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பலபேரின் குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்துள்ளது. எனவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். இரண்டு கைகளால் நேர்மையாக சம்பாதித்தால் தான், அந்த பணத்தை கொண்டு குடும்பத்திற்கு கொடுத்தால் தான் மனிதன். நான் சரத்குமார் அவர்களை விமர்சிக்கவில்லை . ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை முடக்க வேண்டும், பணம் கிடைப்பதற்காக நிறைய பேர் நடிக்கிறார்கள், அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். என்னிடம் பலபேர் ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்திற்கு கேட்டார்கள், நடிக்கமாட்டேன் என்று தெரிவித்தேன். எனக்கு இதில் உடன்பாடு இல்லை, ஆன்லைன் சூதாட்டத்தில் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு நான் காரணமாக இருக்கமாட்டேன்” என்றார்.
அரசியலுக்கும் வந்து அமைச்சரானால் திரைப்படங்களில் நடிக்க கூடாது என்று ஜெயக்குமார் கூறிய கருத்திற்கு , முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திரைப்படப் பாடல்களை பாடி இருக்கக் கூடாது, மேடைகளில் சினிமா பாடல்கள் பாடியுள்ளார். இதை தவிர்த்து இருந்தால் அதற்கான பதிலை தெரிவித்து இருப்பேன்.மேலும் நடிகர் விஜயகாந்தின் பெயர் நடிகர் சங்க கட்டிடத்தில் நிச்சயம் இடம்பெறும், அதுதொடர்பாக அனைத்து நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுப்போம் என்று கூறினார்.
பின்னர் சேலம் விஷால் நற்பணி மன்றம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதன்பின் நடிகர் விஷால் மாணவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.