IT Raid: அமைச்சர் செந்தில்பாலாஜியை சுத்து போடும் வருமானவரித்துறை; மேலும் 3 இடங்களில் அதிரடி சோதனை..!
அமைச்சருக்குச் சொந்தமான காந்திகிராமம், க.பரமத்தி மற்றும் பவுத்திரம் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் இன்று காலை அதிரடியாக வருமான வரித்துறை சோதனை செய்தது. இதனை சற்றும் எதிர்ப்பாராத அமைச்சர் வட்டாரங்கள் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அமைச்சருக்குச் சொந்தமான காந்திகிராமம், க.பரமத்தி மற்றும் பவுத்திரம் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் செந்தில் பாலாஜி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”இந்த சோதனையை நாங்கள் புதிதாக எதிர்கொள்ளவில்லை. கடந்த தேர்தலின் போது நாங்கள் இந்த சோதனையை எதிர்க்கொண்டோம். வருமானவரித்துறை சோதனை சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவும் நடைபெற்றது.
தற்போது எனது இல்லத்தில் நடக்கவில்லை, எனது சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் இல்லங்களில் சோதனை நடந்து வருகிறது. விரும்பத்தகாத சம்பவங்கள் நடத்த நிலையில், கரூருக்கு தொடர்பு கொண்டு நிர்வாக பெருமக்கள் யாரும் சோதனை நடக்கும் இடங்களில் இருக்க கூடாது. சோதனை நடத்துபவர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் என்று கூறினேன். அவர்கள் அனைவரும் கலைந்து சென்றுள்ளார்கள். வருமானவரித்துறை எவ்வுளவு நாட்கள் சோதனை நடத்தினாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.
வருமானவரிதுறை சோதனைக்கு அதிகாலையில் சென்றவர்கள் பெல் அடித்துவிட்டு சிறிது நேரம் காத்திருக்காமல் கேட்டில் இருந்து ஏறி குதித்த வீடியோவை எனக்கு அனுப்பி உள்ளார்கள். சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். எங்களுக்கு தொடர்பு இல்லாதவர்கள் வீட்டிற்கும் அவர்கள் சென்றிருக்கிறார்கள்.
எனக்கு தெரிந்தவரை 40-க்கும் மேற்பட்ட பகுதிகளில் சோதனை நடப்பதாக கூறி உள்ளார்கள். வருமானவரித்துறை சோதனையை நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரே போன் காலில் அனைவரையும் விலகி போக சொல்லிவிட்டேன். அரவக்குறிச்சி, கரூரில் தேர்தல் பரப்புரை செய்து வெற்றி பெற செய்து அமைச்சராக பணியாற்றும் வாய்ப்பை முதலமைச்சர் வழங்கி உள்ளார். மிகப்பெரிய அங்கீகாரத்தை முதலமைச்சர் எனக்கு வழங்கி உள்ளர்கள். வருமானவரி ஏய்ப்பு செய்திருந்தால் தாராளமாக நடவடிக்கை எடுத்துக் கொள்ளட்டும்.
2006-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நான் வேட்புமனுவில் என்ன தாக்கல் செய்தேனோ அதில் இருந்து ஒரு சொத்தை மட்டுமே நான் விற்பனை செய்துள்ளேன். 2006-ஆம் ஆண்டு தொடங்கி ஒரு சதுர அடி நிலம் கூட நானோ, எனது சகோதரனோ, எங்களது தாயோ, தந்தையோ வாங்கவில்லை. இனி வாங்கவும் மாட்டோம். இருக்கும் சொத்துக்களே எங்களுக்கு போதுமானது.
நான் வீடுகட்டுவதாக சொல்லும் இடம் எனது தம்பி மனைவியின் தாயார் தங்களது மகள்களுக்கு தங்கள் சொத்துக்களை தானமாக கொடுத்துள்ளார்கள். அந்த இடம்தான் வீடுகட்டுவதாக சொல்லும் இடம். நான் நினைத்துப்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய இடத்தை கொடுத்துள்ளார் முதல்வர். எனது வாழ்நாள் முழுக்க அவருக்கு நன்றி உணர்வோடு பணியாற்றுவேன்” இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பேட்டியில் தெரிவித்தார்.