Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படுமா? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..
பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பையும் சேர்த்து வழங்குவது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பையும் சேர்த்து வழங்குவது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து கரும்பை வழங்கிட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தை திருநாளான பொங்கலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசில் என்னென்ன பொருட்களை வழங்குவது என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியக்கருப்பன் மற்றும் மூத்த அமைச்சரான துரைமுருகனோடு இன்று ஆலோசனை நடைபெற்றது.
திமுக அரசு பொறுப்பேற்றதும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்போடு சேர்த்து பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை, உப்பு மற்றும் மஞ்சள் பை ஆகிய 21 பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த முறை பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை ஆகியவற்றை மட்டும் தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு என்று அச்சடிக்கப்பட்ட மஞ்சள் பையில் வைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு திட்டமிட்டது.
ஆனால் கரும்பு இடம்பெறாதது அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி, பொங்கல் பரிசில் கட்டாயம் கரும்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் ஜனவரி 2ஆம் தேதி திருவண்ணாமலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்கப்படுமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.