Custodial Torture : பற்களை பிடுங்கிய விவகாரம்.. ஆய்வாளர் தலைமையில் குழு அமைப்பு.. விசாரணை தீவிரம்..
அம்பையில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் நெல்லை மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் உலக ராணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை அம்பையில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் நெல்லை மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் உலக ராணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை சிபிசிஐடி வசம் சென்ற நிலையில் புதிய விசாரணை அதிகாரியாக உலக ராணி நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கைதிகளில் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.முன்னதாக பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட கைதிகளில் பற்களை கற்களால் தாக்கி உடைத்ததாக பல்வீர் சிங் புகார் எழுந்தது. இதையடுத்து, ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது 4 பிரிவுகளின் கீழ் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்டு ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, முதன்மைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் அவர்களை விசாரணை அதிகாரியாக நியமனம் செய்து கடந்த 7ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் அம்பாசமுத்திரம் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கடந்த 9 ம் தேதி நெல்லை மாவட்டம் வருகை தந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா, மாவட்ட ஆட்சியரிடம் சார் ஆட்சியரால் முதற்கட்ட விசாரணை நடத்தி சமர்பிக்கபட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையை பெற்றுகொண்டார்.
தொடர்ந்து, கடந்த 10ம் தேதி அமுதா ஐஏஎஸ் முதற்கட்ட விசாரணையை தொடங்கினார். அந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட நபர்கள் யாரும் ஆஜராகாததால் அவர் திரும்பி சென்றார். தொடர்ந்து, 2 ம் கட்ட விசாரணை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இரண்டாம் கட்ட விசாரணையின் போது ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதாவிடம் பாதிக்கப்பட்ட நபரான சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த சூர்யாவின், தாத்தா பூதப்பாண்டி, விகேபுரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் தாயார் ராஜேஷ்வரி, தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த கணேசன் மற்றும் 17 வயது மற்றும் 16 வயது இளம் சிறார்கள் இருவர் என மொத்தம் 5 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
என்னதான் பிரச்சனை?
நெல்லை மாவட்ட அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்தவர் பல்வீர் சிங். இவர் பதவியேற்றதில் இருந்து அம்பாசமுத்திரம் பகுதியில் சின்ன குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார். தொடர்ந்து அவர்களின் பற்களை பிடுங்கியும், வாயில் ஜல்லி கற்களை போட்டும் கொடூரமான தண்டனை வழங்கி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி போன்ற காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களின் பற்களை பிடுங்கியதாகவும் கூறப்படுகிறது.