தலைமைச் செயலகத்திலேயே பெண் செய்தியாளருக்கு மிரட்டல்: அரசு என்ன செய்கிறது? தலைவர்கள் கண்டனம்
ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளின் அவல நிலை குறித்து பதிவிட்ட பெண் செய்தியாளர் லதா என்பரை தலைமைச்செயலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் அலுவலகத்தில் வைத்து மிரட்டி அனுப்பி உள்ளனர்.
தலைமைச் செயலகத்திலேயே பெண் செய்தியாளருக்கு மிரட்டல் விடுத்த ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட அலுவலர் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து ஈபிஎஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:
’’ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளின் அவல நிலை குறித்து செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்த விளக்கம் தருவதாக பெண் செய்தியாளர் லதா என்பரை தலைமைச்செயலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் அலுவலகத்தில் வைத்து மிரட்டி அனுப்பி இருப்பது சமூகநீதி, பெண் விடுதலை குறித்து பக்கம்பக்கமாக பேசும் விடியா திமுக அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது.
ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலாளர் லட்சுமி பிரியா பேட்டி கொடுக்க தலைமைச் செயலகத்திற்கு அழைத்த நிலையில், பேட்டியின் இடையில் பெண் செய்தியாளர் லதா ,அரசு அதிகாரி வெற்றிச்செல்வன் என்பவரால் மிரட்டப்பட்டு, செயலாளர் அறையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஒரு பெண் செய்தியாளர் நடத்தப்படும் முறை இதுதானா?
ஆதி திராவிடர் மாணவர் விடுதியின் உண்மை நிலையை மக்களுக்கு வெளியே கொண்டுவந்த ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகத்தை, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பெயரால் திமுக அரசு மிரட்டுவது பாசிசத்தின் உச்சம். திமுக ஆட்சியில், தலைமைச் செயலகத்தில், ஒரு பெண் செய்தியாளர் நடத்தப்படும் முறை இதுதானா?
பெண் செய்தியாளரை மிரட்டிய அரசு அதிகாரிகள் மற்றும் துறைச் செயலாளர் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், அதிகார மமதையோடு ஊடகங்களை ஒடுக்க நினைக்கும் முயற்சிகளை கைவிடுமாறு முதல்வரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட அலுவலர்
வெற்றிச்செல்வனை பணி நீக்கம் செய்ய வேண்டும்: அன்புமணி
தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நல மாணவ, மாணவியர் விடுதிகள் மிக மோசமாக பராமரிக்கப்படுகின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதை அம்பலப்படுத்த வேண்டியது செய்தியாளர்களின் கடமை. அதைத்தான் பெண் செய்தியாளர் செய்திருக்கிறார். அதற்காக அவரை எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை சட்டத்தில் வழக்கு தொடர்ந்து கைது செய்வோம் என்று மாவட்ட அலுவலர் மிரட்டுவது அவரது அதிகாரத் திமிரைத்தான் காட்டுகிறது. அதுவும் ஒரு துறையின் செயலாளர் நேர்காணல் கொடுத்துக் கொண்டிருக்கும் போது குறுக்கே புகுந்து இத்தகைய மிரட்டலை விடுக்கிறார் என்றால், செயலாளரை விட அவர் அதிகாரம் பெற்றவரா? என்ற வினா எழுகிறது.
பெண் செய்தியாளரை மிரட்டி அலுவலகத்திலிருந்து வெளியேற்றிய அதிகாரி வெற்றிச் செல்வனை பணி நீக்கம் செய்ய வேண்டும். பெண் செய்தியாளர் மிரட்டப்படுவதை தடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த துறை செயலாளர் லட்சுமிப் பிரியாவிடம் இது குறித்து அரசு விளக்கம் பெற வேண்டும். செய்தியாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளை முறையாக பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.