(Source: ECI/ABP News/ABP Majha)
சாதியை மறுத்து மணந்த பெற்றோர் : 3 வயது சிறுவனுக்கு 'சாதி மதம் அற்றவர்' சான்றிதழ்..
கலப்பு திருமணம் மனோஜின் மகன் யுவனுக்கு, தற்போது 'எந்த சாதி பிரிவையும் சாராதவர் மற்றும் எந்த மதப் பிரிவையும் சாராதவர்' என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத இந்த சாதிப்பிரிவுகள் இந்தியாவின் சாபமாக பார்க்கப்படுகிறது. சாதியால் மக்கள் இணைந்து வாழும்போது மனிதனில் எஞ்சியிருக்கும் மிருகத்தனங்கள் எட்டிப்பார்க்கிறது. வஞ்சங்கள், கலவரங்கள், கொலைகள், கற்பழிப்புகள் சாதியின் பெயரால் நடத்தப்படுகின்றன. ஒடுக்குமுறை ஒரு போதையென சாதிய படிநிலைகளுக்குள் மக்களை வாழ நிர்பந்திக்கிறது. இதனை ஒழிக்க பல ஆண்டுகளாக பல்வேறு தலைவர்கள் போராடி வந்த போதிலும் இது வேரோடு பிடுங்கப்படும் செயல்பாட்டில் தான் உள்ளது. அவ்வளவு பெரிய செயல்பாட்டை ஒவ்வொருவரும் தன் பங்கை அளித்து வர தூணாய் நிற்கிறார்கள் பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்கள்.
சாதியற்றவர் சான்றிதழ்
அந்த வகையில் அதற்கெதிராக நிலைப்பாடு எடுக்கும் புதிய விஷயமாக, 'சாதியற்றவர்' சான்றிதழ் பெறுவதும் இணைந்துள்ளது. சான்றிதழில் மட்டும் சாதியை ஒழிப்பது சரியா என்ற விவாதமும் உள்ளது, ஆனாலும் இதுவும் ஒரு மாற்றம் தான் என்று சிலர் ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள். அந்த வகையில் முதன்முதலாக வழக்கறிஞர் ஸ்நேகா சாதியற்றவர் என்ற சான்றிதழை போராடி வாங்கினார். அவருக்கு பிறகு பலர் அந்த சான்றிதழை வாங்கிக்கொண்டு உள்ளனர்.
சாதி மறுத்து திருமணம்
சென்னை மேற்கு அண்ணா நகரைச் சேர்ந்தவர்தான் மனோஜ். 36 வயதாகும் இவர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்ட இவர், தன்னுடைய 3 வயது மகன் யுவனுக்கு சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழ் கோரி அம்பத்தூர் தாசில்தாரிடம் இணையதளம் மூலம் கடந்த ஜூன் மாதம் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அம்பத்தூர் தாசில்தார் அவருக்கு பலநாட்கள் ஆகியும் சான்றிதழை வழங்கவில்லை.
ஐகோர்ட்டில் மனு
வருகிற விஜயதசமி அன்று தனது மகனை பள்ளியில் சேர்க்க உள்ளதாகவும், அதற்குள் சான்றிதழ் வழங்க வேண்டி உத்தரவிட வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டில் மனோஜ் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், 2 வாரத்துக்குள் மனு தாரருடைய மகனுக்கு சாதி, மதம் இல்லை என்ற சான்றிழை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி மனோஜின் மகன் யுவனுக்கு, தற்போது 'எந்த சாதி பிரிவையும் சாராதவர் மற்றும் எந்த மதப் பிரிவையும் சாராதவர்' என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை அம்பத்தூர் தாசில்தார் ராஜசேகர் மனோஜிடம் வழங்கினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்