Chengalpattu Vaccine Plant | 100 ஏக்கர்.. 900 கோடி.. விடிவு கிடைக்குமா செங்கல்பட்டு தடுப்பூசி மையத்துக்கு?
2012-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செங்கல்பட்டில் 100 ஏக்கர் பரப்பளவில் தடுப்பூசி தயாரிப்பு மையம் அமைக்க அனுமதியளித்தது. இந்த மையம் கிட்டதட்ட 9ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது.
கொரோனா பெருந்தொற்று பாதிப்பின் இரண்டாவது அலை இந்தியாவில் தற்போது பரவி வருகிறது. இதைத்தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் வரும் மே மாதம் 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்தியாவில் அதிகளவில் தடுப்பூசி தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்கவும் மற்ற நாடுகளின் தடுப்பூசியை பெறவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தச் சூழலில் செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு மையம் கொரோனா தடுப்பூசி தயாரிக்க பயன்படுத்தப்படவில்லை.
மேலும் இந்த மையம் கிட்டதட்ட 9 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. 2012-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செங்கல்பட்டில் 100 ஏக்கர் பரப்பளவில் தடுப்பூசி தயாரிப்பு மையம் அமைக்க அனுமதியளித்தது. இந்த மையம் அனைவருக்கும் நோய்த்தடுப்பு என்ற (universal Immunization programme) திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இம்மையத்தின் மூலம் தடுப்பூசி தயாரிப்பு, ஆராய்ச்சி ஆகியவை நடத்த வழிவகை செய்யப்பட்டது.
எனினும் தற்போதுவரை இந்த மையம் ஒரு நோய்க்கு கூட தடுப்பூசி தயாரிக்கவில்லை. மேலும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தபோது ஹாண்ட் சானிடைசர் மட்டும் தயாரித்தது. இந்த விவகாரம் தொடர்பாக ‘The Print’ தளம் ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. அதில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரியின் கருத்தின்படி இந்த மையம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்த மையத்தை அமைக்க 600 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்ட நிலையில் 2019-ஆம் ஆண்டு 904 கோடி ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. இந்த மையத்தை கடந்த ஜனவரி மாதம் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆய்வு செய்தார். அதன்பின்னர் ஜனவரி 16-ஆம் தேதி இந்த மையத்தில் தடுப்பூசி தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் தற்போது இங்கு தடுப்பூசி தயாரிக்க எந்த ஒரு தனியார் நிறுவனமும் முன்வரவில்லை.
செயல்படாமல் இருக்கும் இந்த மையம் தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பிக்கள் பலர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த மையத்தை பயன்படுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கும் தொடரப்பட்டது. கொரோனா தடுப்பூசி தயாரிக்க இந்திய அரசு தீவிர முனைப்பு காட்டிவரும் நிலையில் இந்த மையம் 9 ஆண்டுகளாக தொடங்கப்படாமல் உள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக இந்த விஷயத்தில் முடிவு எடுத்து மையத்தை திறக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.