புதுச்சேரி மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... பெங்களூரு, ஐதராபாத்துக்கு மீண்டும் விமான சேவை - எப்போது தெரியுமா?
புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத்துக்கு வரும் டிசம்பர் 20-ல் இண்டிகோ நிறுவனம் விமான சேவையை தொடங்குகிறது.

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்குகிறது. பெங்களூரு, ஹைதராபாத்துக்கு வரும் டிசம்பர் 20-ல் இண்டிகோ நிறுவனம் விமான சேவையை தொடங்குகிறது.
புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை
புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையம் கடந்த 2013 ஜனவரியில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. விமான நிலையம் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் மூடப்பட்டு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. இந்த பணிகள் நிறைவடைந்து கடந்த ஆண்டு அக்டோபர் முதல் மீண்டும் விமான நிலையம் செயல்பட துவங்கியது. இந்நிலையில் புதுச்சேரியிலிருந்து பெங்களூரு, ஐதராபாத்துக்கு விமானங்களை இயக்குவதை கடந்த மார்ச் 30-ம் தேதியுடன் ஸ்பைஸ் ஜெட் நிறுத்தியது.
இதனால் கடந்த 7 மாதங்களாக விமானங்கள் ஏதும் புதுச்சேரியில் இருந்து இயக்கப்படவில்லை. இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை துவங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இண்டிகோ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்படி கடந்த அக்டோபர் 27-ம் தேதி முதல் விமான சேவையை தொடங்க இருந்தது இண்டிகோ. ஆனால் எதிர்பாராத காரணங்களால் அதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் டிசம்பர் 20 முதல் விமான சேவை தொடங்கப்படவுள்ளது.
(ATR-72) சிறிய ரக விமான சேவையை வருகின்ற டிசம்பர் 20ம் தேதி முதல் துவங்க உள்ளது
அதன்படி இண்டிகோ நிறுவனம் 72 பேர் பயணிக்க கூடிய (ATR-72) சிறிய ரக விமான சேவையை வருகின்ற டிசம்பர் 20ம் தேதி முதல் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. காலை 11.10 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் விமானம், பகல் 12.25 மணிக்கு புதுச்சேரி வந்தடையும் எனவும், பின்னர் புதுச்சேரியில் இருந்து 12.45 மணிக்கு புறப்பட்டு 2.30 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மறு மார்க்கமாக பிற்பகல் 3.05 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து புறப்படும் விமானம் மாலை 4.50 மணிக்கு புதுச்சேரி வந்தடையும் எனவும், பின்னர் 5.10 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு மாலை 6.35 மணிக்கு மீண்டும் பெங்களூர் சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

