TN Weather Report: தேவையில்லாம வெளியே போகாதீங்க; சேலம்தான் 3வது இடம்: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
நேற்று இந்தியாவில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் சேலம் 3வது இடத்தில் இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருகிறது இதனால் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இன்னும் மே மாதம் தொடங்காத நிலையில் இந்த ஆண்டு வெப்பநிலை மண்டையை பிளக்கிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. அந்த வகையில், நேற்று இந்தியாவில் அதிகபட்ச வெப்பநிலையில் சேலம் 3வது இடம் பிடித்துள்ளது. சேலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 42.3 டிகிரி செல்சியஸ் அதவாது 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஆந்திராவில் 110 டிகிரி பாரன்ஹீட்டும், ஒடிசாவில் 109 டிகிரி பாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிகப்படியான வெயில் பதிவாகி வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் ஒரி சில மாவட்டங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இதன் காரணமாக மக்கள் வெளியே வர வேண்டாம் என கரூர், வேலூர், கோவை மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். குறிப்பாக நீர்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிகின்றனர்.
கடுமையான வெயிலின் காரணமாக தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இயல்பை விட 3° – 5° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 9 இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் ஈரோடு மாவட்டத்தில் இயல்பை விட 4.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.