ஒமிக்ரானை காரணம் காட்டி ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்கும் பீட்டா!
தற்போது வருகின்ற 2022 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், ஒரு புறம் கொரோனா வைரஸின் மாறுபாடான ஒமிக்ரானும் மக்களின் வேகமாக பரவுகிறது.
ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்துவருவதால் தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டுப்போட்டிகளை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசிற்கு பீட்டா அமைப்பினர் கடிதம் எழுதியுள்ளனர்.
தமிழர்களின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றும் விழாவாக ஜல்லிக்கட்டு போட்டிகள் தொன்று தொட்டு நடைபெற்றுவருகிறது. அதிலும் பொங்கல் திருநாளன்று முதல் தொடங்கும் மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு மவுசு அதிகமாக இருக்கும். ஆனால் காளைகளை இதில் துன்புறுத்துகின்றனர் என பீட்டா அமைப்பினர் தொடர்ந்த வழக்கின் பேரில் இப்போட்டிகள் நடத்துவதற்கு சட்டரீதியாக தடை விதிக்கப்பட்டது. இந்த சூழலில் தான் கடந்த 2017 ஆம் ஆண்டு இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் இணைந்து நடத்திய போராட்டத்தின் விளைவாக ஜல்லிக்கட்டு போட்டிகள் மீண்டும் கோலாகலத்துடன் தொடங்கியது. ஆனால் கொரோனா தொற்றின் பரவல் அதிகரிப்பினால் போடப்பட்ட ஊரடங்கினால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடைபெறவில்லை.
இந்நிலையில் தற்போது 2022 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், ஒரு புறம் கொரோனா வைரஸின் மாறுபாடான ஒமிக்ரானும் மக்களிடம் வேகமாக பரவுகிறது. இந்த சூழலில் தமிழர்களின் வீர விளையாட்டை நடத்தினால் நிச்சயம் மக்கள் அதிகமாகப்பாதிக்கப்படுவார்கள் என்பதால் இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துவருகிறது. இந்நிலையில் தான், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என பீட்டா அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி மணிலால் வல்லியத்தே கடிதம் எழுதியுள்ளார். பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப்போட்டிக்கு அரசு அனுமதி வழங்கிய நாள் முதல் இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதோடு 4 ஆயிரத்து 696 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், ஒருபுறம் ஓமிக்ரான் பாதிப்பும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. எனவே தற்போது மக்களுக்கு அத்தியாவசியமற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என தமிழக அரசிற்கு பீட்டா அமைப்பினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
மேலும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் மிகவும் வேகமாகப் பரவுவதால் பொதுமக்களுக்குக் கடுமையான உடல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஜல்லிக்கட்டு விளையாட்டைப்பார்க்க மக்கள் ஆர்வத்துடன் அதிகம் கூடும் போது சொல்ல முடியாத அளவிற்கு பெரும் பாதிப்பை மக்கள் சந்திக்க நேரிடும். எனவே மக்களின் நலனைக்கருத்தில் கொண்டு உலகப்புகழ் பெற்ற தமிழர்களின் பராம்பரிய விளையாட்டிற்கு இந்தாண்டு அனுமதி தரக்கூடாது என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் சுமார் 80 மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளனர். ஒரு வேளை ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதிக்கவில்லை எனில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிச்சயம் ஒமிக்ரான் வேகமாக பரவும். எனவே மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு இதற்குத் தடை விதிப்பதோடு மருத்துவர்களின் பணிச்சுமையை குறைக்கவும் தமிழக அரசு உதவ வேண்டும் என்று மருத்துவர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டுவருகிறது.