அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் சோதனை.. களமிறங்கிய வருமான வரித்துறையினர்..!
அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான திருவண்ணாமலை அருணை கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான அருணை மருத்துவல் கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அருணை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். இதையடுத்து, அங்கு சோதனை நடைபெறுவதால் 20க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் வருமான வரித்துறையினர் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.
எ.வ.வேலுவிற்கு சொந்தமான கல்லூரிகள்:
திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலை தென்மாத்தூர் ஊராட்சியில் 500 ஏக்கர் பரப்பளவில் அருணை பொறியியல் கல்லூரி, அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கரன் மகளிர் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி, ஜீவா வேலு பன்னாட்டு பள்ளி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றது.
இந்நிலையில் கடந்த 3ம் தேதி வருமான வரித்துறையினர் 120 பேர் அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து ஐந்து நாட்களாக சோதனை நடத்தி கோப்புகள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
சீல் வைக்கப்பட்ட அறைகள்:
தற்போது மீண்டும் அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சென்னையிலிருந்து மூன்று கார்களில் ஐந்து பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் காவல்துறையினர் பாதுகாப்புடன் அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள மெடிக்கல் சென்டர் என்ற கட்டிடத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக கடந்த முறை சோதனை செய்ய வந்தபோது ஒரு சில அறைகளுக்கு சீல் வைத்துள்ளதாகவும், அந்த அறைகளில் தற்போது சோதனை செய்ய வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.