TN Rain Alert: எந்த பகுதிகளில் 6 செ.மீ மழை? இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? இன்றைய நிலவரம்..
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், தேவாலா மற்றும் பரமகுடி மாவட்டத்தில் 6 செ.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் அடுத்த சில தினங்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலா (நீலகிரி மாவட்டம்), பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம்) தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து, மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்) 4, கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்), மேல் கூடலூர் (நீலகிரி மாவட்டம்), சித்தம்பட்டி (மதுரை மாவட்டம்), அரிமளம் (புதுக்கோட்டை மாவட்டம்), திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்), சின்னக்களார் (கோவை மாவட்டம்) தலா 3, தல்லாகுளம் (மதுரை மாவட்டம்), பார்வூட் (நீலகிரி மாவட்டம்), சிவகங்கை, சந்தியூர் கேவிகே ஏடபிள்யூஎஸ் (சேலம் மாவட்டம்), திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) தலா 2, மேலூர் (மதுரை மாவட்டம்), எடப்பாடி (சேலம் மாவட்டம்), தனிமங்கலம் (மதுரை மாவட்டம்), இடையபட்டி (மதுரை மாவட்டம்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி மாவட்டம்), வால்பாறை (கோவை மாவட்டம்), வால்பாறை தாலுகா அலுவலகம், நடுவட்டம், கல்லந்திரி (மதுரை மாவட்டம்), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்), குமாரபாளையம் (நாமக்கல் மாவட்டம்), கோவிலங்குளம் (விருதுநகர் மாவட்டம்), கிளானிலை (புதுக்கோட்டை மாவட்டம்) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்கள் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இலட்சத்தீவு பகுதிகள், வடக்கு கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.