TN Govt To Employees: வேலைக்கு வராவிட்டால் ஊதியம் கட்; ஒழுங்கு நடவடிக்கையும் பாயும்: ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு செக்!
TN Govt Warning To Employees: வேலைக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஊதியம் கிடையாது என, தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.
TN Govt Warning To Employees: அரசு ஊழியர்களின் போராட்டம் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் எழுதியுள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை:
தமிழ்நாடு அரசின் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமை செயலாளர் சக்தி காந்த தாஸ் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், “தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்களின் அங்கீகாரம் பெற்ற மற்றும் அங்கீகாரம் பெறாத சங்கத்தினர், நாளை (வியாழக்கிழமை) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக முன்மொழிந்துள்ளனர். தமிழக அரசின் விதிப்படி, அரசின் செயல்பாட்டை பாதிக்கக்கூடிய எந்தவித வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களிலும் அரசு ஊழியர்கள் ஈடுபடக்கூடாது அல்லது ஈடுபடப்போவதாக பயமுறுத்தக்கூடாது. அது, அரசு விதிகளை மீறியதாக அமைந்துவிடும்.
எனவே, இதுபோன்று போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உங்கள் கீழ் உள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். 15ம் தேதியன்று அரசு ஊழியர்கள் யாராவது அலுவலகத்திற்கு வரவில்லை என்றாலோ அல்லது இந்த சங்கத்தினர் நிர்ணயிக்கும் வேறு தேதியில் வரவில்லை என்றாலோ அவர்கள் பணிக்கு வரவில்லை என்று கருத வேண்டும். எனவே அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். இந்த போராட்டம் நடைபெறும் 15ம் தேதி மருத்துவ விடுப்பு தவிர மற்ற விடுப்புக்கள் அளிக்கக்கூடாது. எனவே அன்றைய தினம் காலை 10.15 மணிக்குள் உங்கள் துறையில் உள்ள பணியாளர்களின் வருகை பற்றி அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அன்றைய தினம் வேலைக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது” என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் போராட்டம் அறிவிப்பு:
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் தான் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 15ம் தேதி மாநிலம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து, பிப்ரவரி மாதம் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
அரசின் சமரச முயற்சிகள்:
இதனிடயே, போராட்டத்தை தடுத்து நிறுத்த அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில், ‛‛அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும். நிதி நிலைமை சரியான உடன் படிப்படியாக அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். இதனால் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும்'' என வலியுறுத்தி இருந்தார். ஆனால் அவரின் கோரிக்கையை ஜாக்டோ ஜியோ ஏற்கவில்லை. தங்களின் கோரிக்கையை தமிழக அரசு ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் திட்டமிட்டப்படி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா எச்சரித்துள்ளார்.