(Source: ECI/ABP News/ABP Majha)
தேர்தலில் தமிழ்நாட்டில் மோடி நின்றால் எதிர்த்து நான் போட்டியிடுவேன் - சீமான் ஆவேசம்
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தராமல் துரோகம் செய்யும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இருந்து திமுக விலக வேண்டும் - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
திருச்சி மாநகர் புத்தூர் நால்ரோடு சிக்னல் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக வென்றாக வேண்டும் தமிழ் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். பின்பு மேடையில் பேசிய சீமான், "தமிழ் வெல்ல வேண்டும், தமிழை தனது உயிர்க்கு மேல நேசிக்கும் தமிழன் இந்த நாட்டை ஆள வேண்டும். மொழி என்பது ஒரு தேசத்தின் அடையாளம் ஆகும். சீமான் என்ன ஜாதி, மதம் என்ற சந்தேகம் வரலாம், என் வாயில் இருந்து வரும் தமிழ் மொழி சொல்லும் நான் தமிழன் என்று. தமிழ் மொழி பேச்சு மொழி இல்லை, எங்கள் உயிர் மொழி ஆகும். உலகில் மனிதன் பேசிய முதல் மொழி தமிழ் மொழி என்றார். தமிழ் மொழி அழிந்துவிட கூடாது. நம் மொழியை அழிக்க பல சதிகள் நடந்து வருகிறது. தமிழ் மொழியின் பெருமையை இந்த உலகம் அறியும். தமிழ் படித்தால் வேலை, கிடைக்குமா என்று சொன்னால் அவன் மீது காரி துப்புங்கள். ஆங்கிலம் படித்தால் தான் வேலை என்று சொன்னவன் முட்டாள். நம் நாட்டில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆகியோர் முழு பைத்தியம், திமுக , அதிமுக அரை பைத்தியும் இவர்களுக்கு எப்படி தெரியும் தமிழின் பெருமை. தமிழ்நாடு என்ற பெயர் நாங்கள் தான் வச்சோம், பெற்ற தாய் தமிழ் மொழி ஆகும். ஆனால் தமிழ்நாடு மாநில பிரிக்கப்பட்ட நாளை கொண்டாட வில்லை, ஆனால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் , உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள் என்ன கொடுமை இது.
தேர்தல் வரவுள்ளதால் திமுக முதல்வர் மாணவர்கள், இளைஞர்கள், மீனவர்களை சந்தித்து வருகிறார். அனைவரும் மக்களின் நலன் சார்ந்து சிந்திக்க வேண்டும். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தலை பற்றியே சிந்திக்கிறார்கள். இவர்கள் இது என்ன மோசம். தமிழ் மொழி படித்தால் வேலை இல்லை, ஆங்கிலம் படித்தால் வேலை என்கிறார்கள். என் தாய் மொழியை நான் பேசாமல் வேறு எவண்டா பேசுவான்” என்றார்.
மேலும், இங்கு மொழிக்கு வேலை இல்லை, படித்த அறிவுக்கு தான் வேலை கிடைக்கிறது. கட்டாயமாக இந்தி படிக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். நாங்கள் கெட்ட பசங்க, நாங்க காட்டான், இந்தி ஏன் படிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பிற மொழிகள் கலந்து கலந்து தமிழ் மொழி அழிந்து வருகிறது. அனைத்து மொழியையும் பெற்ற தாய் தமிழ் ஆகும். பாஜக, காங், திமுக, அதிமுக 4 பேரும் எனக்கு சமனான எதிரிகள் ஆவார்கள். கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று சொல்லுகிறது. ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து செயல்பட்டு கொண்டு இருக்கிறார். இது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம். உடனடியாக தண்ணீரை திறக்க வேண்டும், இல்லை என்றால் கூட்டணி முறியும் என காங்கிரஸ் கட்சிக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விட வேண்டும். அப்படி செய்தால் நான் வரும் தேர்தலில் போட்டியிடாமல் , திமுகவிற்கு ஆதரவு தருகிறேன்.
நாம் தமிழர் கட்சி எப்போது தனித்து தான் தேர்தலில் போட்டியிடும். தமிழ்நாட்டில் ஏன் திமுக, அதிமுக தனித்து போட்டியிட பயப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு அனைத்து துரோகங்களையும் செய்தது காங்கிரஸ் கட்சி, இதற்கு துணை நின்றது திமுக. நான் ஆட்சியில் அமரும் போது , தமிழ் மொழியில் படித்தால் மட்டுமே வேலை என சட்டம் கொண்டு வருவேன். வேறு மொழிகளை படித்தால் தமிழ்நாட்டில் வேலை இல்லை. என் உயிர் உள்ளவரை என் இன மக்களுக்காக வாழ்வேன். மேலும் மோடி வரும் தேர்தலில் ராமேஸ்வரத்தில் போட்டியிட்டால், அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன், அன்று தரமான சம்பவம் உள்ளது. ஆனால் என்னை பொறுத்துவரை எப்போதும் தனித்து தான் போட்டியிடுவேன். மக்கள் மனதில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தோன்றுகிறது அவர்களுக்கு வாக்களியுங்கள். என்னை எத்தனை முறை ஏமற்றினாலும் நான் உங்களுக்காக போராடிக்கொண்டே இருப்பேன்” என்றார்.