Khushbhu : ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நான் போகவில்லை; காரணத்தை போட்டுடைத்த குஷ்பு
Ayodhya Ram Temple: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
நடிகையும் பாஜகவைச் சேர்ந்தவரும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு நாளை மறுநாள் திறக்கவுள்ள ராமர் கோவிலுக்குச் செல்லவில்லை என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அரசியல் தலைவர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை ராமர் கோவில் கமிட்டி சார்பாக வரவேற்பு இதழ்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், நடிகை குஷ்பு இவ்வாறு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ள அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா, வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. குழந்தை ராமரின் சிலையை நிறுவும் இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதோடு, உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அயோத்தி ராமர் கோவில் உருவாவதற்காக பல்வேறு நடிகர்கள் கோடிக்கணக்கான பணத்தை நன்கொடையாக கொடுத்துள்ளார்கள் என்ற செய்திகள் வெளியாகி ராமர் கோவில் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
நாளை மறுநாள் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு வருகின்றார். இப்படியான நிலையில், நடிகை குஷ்பு சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சுத்தப்படுத்தினார். கோவிலில் தரிசனம் செய்த குஷ்பு அங்குள்ள குப்பைகளையும் அகற்றினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, “ கோவிலைச் சுத்தம் செய்வது புதிதல்ல. ஒவ்வொரு பகுதியிலும் கோவில்களைச் சுத்தம் செய்தால் நம்மைப் பார்த்து மற்றவர்களும் சுத்தம் செய்வார்கள். நமது கலாசாரம், நமது பாரம்பரியம் கோவில்கள் தான். கோவில்களை சுத்தம் செய்யும் பணியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதற்காக ஏற்கனவே ஸ்வச் பாரத் உள்ளது.
கோவிலில் பல இடங்களில் அசுத்தமாக உள்ளது. கோவில்கள் சுத்தமாக இருந்தால்தான் கோவிலுக்குப் போகும்போது பக்தர்களுக்கு நிம்மதி கிடைக்கும். கோவிலைச் சுத்தம் செய்வது இந்த ஒரு கோவிலுடன் நிற்கப்போவதில்லை. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் சுத்தம் செய்வோம். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் நான் பங்கேற்கவில்லை. இங்கு நிறைய வேலை இருக்கிறது. ராமர் மறுபடியும் வரமாட்டாரா என்று 500 ஆண்டுகள் காத்திருக்கிறோம். பிரதமர் மோடியின் ஆட்சியில் ராமரை மறுபடியும் பார்க்கப் போகிறோம். இது சந்தோஷமாகவும் பெருமையாகவும் உள்ளது.
ராமர் கோவிலை பொறுத்தவரைச் சாதி மதம் கிடையாது. முழுக்க முழுக்க இந்திய மக்களின் ஒற்றுமையை வெளிக்காட்டும் விதமாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது” என்றார்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில்களை சுத்தம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதனால் பாஜக தலைவர்கள் தொடங்கி ஆளுநர்கள் என பலர் தாங்கள் செல்லும் கோவில்களை சுத்தம் செய்து வருகின்றனர்.