வெளிநாடுகளில் உள்ள ஐம்பொன் சிலைகள் விரைவில் மீட்பு - சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி தினகரன் பேட்டி
''தமிழகத்தில் மற்ற சிலை தடுப்பு சம்பந்தமான வழக்குகளில் உள்ள சிலைகளையும் மீட்க நடவடிக்கை''
தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லுாரை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் சென்னையில் வசித்து வருகின்றார். கடந்த 2016 ஆம் ஆண்டு, பந்தநல்லுாரிலுள்ள மிகவும் பழமையான பசுபதீஸ்வரர் கோயிலில் உள்ள ஐம்பொன் சிலைகள் காணாமல் போனது. இது குறித்து பந்தநல்லுார் காவல் நிலையத்திலும், எஸ்பியுடமும், வெங்கட்ராமன் புகார் அளித்தார். ஆனால் போலீசார், புகார் குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து விட்டனர். பின்னர், வெங்கட்ராமன், சென்னை கோர்ட்டில், காணாமல் போன சிலைகளை கண்டு பிடித்து தர வேண்டும், சிலைகள் சரியாக உள்ளதா என சரி பார்க்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில், அப்போதைய காவல் துறை அதிகாரி பொன்மாணிக்கவேலை சிலைகடத்தல் பிரிவு ஐஜியாக நியமனம்செய்து விசாரிக்க வேண்டும்என உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கினை, கும்பகோணம் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு குறித்து ஐஜி பொன்மாணிக்கவேல், பந்தநல்லுார் கோயிலுக்கு வந்து ஆய்வு செய்தார். அங்கு சிலைகள் காணாமல் போனது தெரிய வந்ததையடுத்து, செயல்அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களை கைது செய்தார். இதனை தொடர்ந்து, தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று சிலைகள் காணாமல் போனது குறித்து வழக்கு பதிந்து, ஏராளமான சிலைகளையும், அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரையிலும், புரோக்கர்கள், வெளிநாட்டை சேர்ந்தவர்கள், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை கைது செய்தார்.
இதே போல் குஜராத் மாநிலத்திலிருந்து ராஜராஜசோழன்-லோகாமாதேவி, ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து நடராஜர் சிலை மற்றும் நுாற்றுக்கும் மேற்பட்ட சிலைகளை கண்டு பிடித்தார். இந்நிலையில் அவரது ஒய்வு காலம் வந்ததால், நீதிமன்றம் சிறப்பு சலுகை அளித்து, ஒரு வருடம் நீடித்தது. அப்போது, ஐஏஎஸ் அதிகாரி, அறநிலையத்துறை ஆணையர்கள், பெரும் தொழிலதிபர்கள் என சிலை காணாமல் போனதற்கு காரணமானவர்கள் அனைவரையும் பாரபட்சமின்றி கைது செய்து, கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தார். மேலும், சிலை கடத்தல் தொடர்பாக, கடந்தாண்டு இரண்ட ஆண்டுகளக்கு முன்பு மூன்று அமைச்சர் தொடர்பில் உள்ளார்கள் என வெளியிட்டதால், ஐஜி பொன்மாணிக்கவேலுக்கு ஒய்வு வழங்கினர். அதன் பின்னர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு செயலற்று போனது. அதன் பின்னர், சிலை கடத்தல் பிரிவு விசாரணை அதிகாரியாக தினகரனை ஐஜியாக பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி தினகரன் தெரிவித்தார். கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்திலுள்ள சிலைகளை பார்வையிட்ட அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு கொண்டுவரப்பட்ட நடராஜர் சிலை, பழனி முருகன் கோவிலின் உற்சவர் சிலை உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட சிலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து ஐஜி தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் பல்வேறு சில தடுப்பு தொடர்பான வழக்குகள் சம்பந்தப்பட்ட சிலைகள் இங்குள்ள சிலை பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சில வழக்குகளில் உள்ள சிலைகள் எந்த கோவிலுக்கு சொந்தமானது என்பது தெரியாமல் உள்ளது. அவற்றை ஆய்வு செய்வதற்காக இங்கு வந்துள்ளேன். இதேபோல் பந்தநல்லூரிலுள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். மேலும் தமிழகத்தில் மற்ற சிலை தடுப்பு சம்பந்தமான வழக்குகளில் உள்ள சிலைகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். சில சிலை கடத்தல் தடுப்பு காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து திருட்டு போன சிலைகளை மீட்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லி மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் வெளிநாடுகளில் உள்ள மற்ற சிலைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்தார்.