Rain Update | மழை.. மழை.. 5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
இதுகுறித்து தெரிவித்த வானிலை ஆய்வு மையம், உள் தமிழகத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது. டெல்டா மற்றும் உள் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையின் சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொருத்தவரை, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40கிமீ -50கிமீ வேகத்தில் காற்று வீசும். இப்பகுதிக்கு மீனவர்கள் நாளை ( ஜூலை 7) வரை செல்லவேண்டாம். அதேபோல், தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் பலத்தக் காற்று வீசும் என்பதால் ஜீலை 8,9 ஆகிய தேதிகளில் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.