Covid 19 Vaccination: 18 வயதானவர்களுக்கு நாளை கொரோனா தடுப்பூசி போடுவது சந்தேகம் என சுகாதாரத்துறை செயலர் தகவல்
தமிழ்நாட்டில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
18 வயது மேற்பட்டோருக்கு போடுவதற்கான கொரோனா தடுப்பூசிகள் இன்னும் வரவில்லை என்பதால், அவர்களுக்கு நாளை தடுப்பூசி போடுவது சந்தேகம் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தொற்று பரவாமல் இருக்க கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றது.
மே 1ஆம் தேதி முதல் 18 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. தற்போது தடுப்பூசி போடும் திட்டம், நாளை தொடங்குவதில் சந்தேகம் உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், “புதிதாக ஆர்டர் செய்யப்பட்ட தடுப்பூசிகளை இதுவரை மத்திய அரசு அளிக்கவில்லை. ஒன்றைக் கோடி தடுப்பூசிகள் மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், நாளைய தினத்தில் அந்த தடுப்பூசிகள் கிடைக்குமா என்று தெரியவில்லை. இதனால், தமிழகத்தில் நாளை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பற்றாக்குறையால் திட்டமிட்டப்படி, இவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், 45 வயதானவர்களுக்கு போடுவதற்கு ஏற்கெனவே தடுப்பூசி கையிருப்பில் உள்ளது” என்றார்.
மேலும், “சென்னை, கோவை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. தமிழ்நாட்டில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விற்பவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை பாயும். சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று கூறினார்.