HC on MRKP's Case: அமைச்சர்களுக்கே நேரம் சரியில்லை போல.. அடுத்ததாக சிக்கலில் MRK பன்னீர்செல்வம்...
சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் எம்ஆர்கே பன்னிர்செல்வத்திற்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அது என்ன உத்தரவு என்று பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் தற்போது அமைச்சர்களுக்கே நேரம் சரியில்லை போல என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. அந்த அளவிற்கு, அமைச்சர்கள் வரிசைகட்டி சிக்கலில் சிக்கி வருகின்றனர். அந்த வரிசையில் அடுத்ததாக இணைந்துள்ளவர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
கடந்த 2006 - 2011-ம் ஆண்டுகளில் அமைச்சராக பதவி வகித்த MRK. பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக 3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. MRK. பன்னீர்செல்வம் அவரது மனைவி மற்றும் மகன் மீதான இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை ஆகியவற்றை மேற்கோள் காட்டி லஞ்ச ஒழிப்புத்துறை வாதங்களை முன்வைத்தது.
MRK. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில், குடும்ப சொத்துக்களையும், அறக்கட்டளை சொத்துக்களையும் இணைத்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளார்கள் என்று லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரி என்றும் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறையின் மறு ஆய்வு மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.
தொடர்ந்து, இன்று அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், அமைச்சர் MRK. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், அமைச்சர் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து, 6 மாதங்களில் விசாரணையை முடிக்கும்படி, கடலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால், அமைச்சர் MRK. பன்னீர்செல்வத்திற்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் அமைச்சர்கள்
அமைச்சர்களுக்கே நேரம் சரியில்லை என்று கூறும் அளவிற்கு, அடுத்தடுத்து அமைச்சர்கள் சிக்கலில் சிக்கி வருகின்றனர். ஏற்கனவே, செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி பறிபோய், சிறை வரை சென்று திரும்பி, மீண்டும் அமைச்சரான நிலையில், தற்போது மீண்டும் அமைச்சர் பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம், மேடைகளில் தாறுமாக பேசி மக்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட அமைச்சர் பொன்முடிக்கு, கட்சிப் பதவி பறிபோன நிலையில், அமைச்சர் பதவியும் கேள்விக் குறியில் உள்ளது. அதுபோக, அவர் மீது வழக்குகளும் தொடுக்கப்பட்டு, உயர்நீதிமன்றம் அவரை வெளுத்து வாங்கியுள்ளது. அதோடு, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இதேபோல், அமைச்சர் துரைமுருகனுக்கும் சில சிக்கல்கள் உள்ளன. அமைச்சர் பொன்முடியின் மேடைப் பேச்சு சர்ச்சையாகி கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்த நிலையில், தனது பேச்சு ஒன்றிற்கு தாமாக முன்வந்து மன்னிப்பு கோரினார் துரைமுருகன். இது ஒருபக்கம் என்றால், அவரது மகன் கதிர் ஆனந்தின் வழக்கு மறுபுறம் அவருக்கு சிக்கலாக அமைந்துள்ளது.
இப்போது, அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கும், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படி, அமைச்சர்கள் வரிசைகட்டி சிக்கலில் சிக்கி வருவது, திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த வருடம் தேர்தல் வரும் வேளையில், இன்னும் இந்த பட்டியலில் எந்தெந்த அமைச்சர்கள் உள்ளனரோ என்று திமுகவினர் புலம்பி வருகின்றனர்.





















