மன்னிப்பு கேட்பது இயல்பு..சாவர்க்கர் ஒரு போராளி - புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அண்ணாமலை
இதே வார்த்தையை மத்திய அமைச்சர் வி.கே.சிங்கும் பயன்படுத்தி இருக்கிறார். அர்த்தம் புரியாத யாருக்காவது மனது புண்பட்டிருந்தால் அது வருத்தம்தான்.
பாஜகவின் தேசிய முன்னாள் செயலாளர் எச்.ராஜா, மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்துவிட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் ”இந்து இல்லாமல் தமிழ் எங்கிருந்து வந்தது? நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானின் அம்மா தமிழச்சியா… அவர் ஒரு மலையாளி. நீங்கள் அனைவரும், PRESSTITUTES. என்னை பீகாரி என்கிறான் ஒரு முட்டாள். நான் பச்சை தஞ்சாவூர் காரன்.” என்று பரபரப்பு கருத்துக்களை கூறினார். அதே போல் திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியனை கடும் சொற்களால் விமர்சித்துப் பேசினார்.
எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். சென்னை பிரஸ் கிளப்(CPC), மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் (CMPC) உள்ளிட்ட சங்கங்களும் பத்திரிகையாளர்கள் மீதான எச்.ராஜாவின் விமர்சனத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். எச்.ராஜா தொடர்பான செய்திகளை புறக்கணிக்க வேண்டும் எனவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனிடையே எச்.ராஜாவின் சொற்களுக்கு இலக்கான சுப.வீரபாண்டியனும் பத்திரிகையாளர்கள் மீதான அவரின் விமர்சனத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையிடம் புகாரளித்தார்.
இந்த நிலையில் கடந்த 28 ஆம் தேதி காரைக்குடியில் தனது பிறந்தநாள் விழாவுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா ”பத்திரிகையாளர்களுக்கு எதிராக நான் ஒன்றும் தவறான வார்த்தையை சொல்லவில்லையே... இதே வார்த்தையை மத்திய அமைச்சர் வி.கே.சிங்கும் பயன்படுத்தி இருக்கிறார். அர்த்தம் புரியாத யாருக்காவது மனது புண்பட்டிருந்தால் அது வருத்தம்தான். நான் பேசியது தரக்குறைவான வார்த்தை இல்லை என்பதற்கு விக்கிபீடியாவில் விளக்கம் உள்ளது.” என கூறினார்.
இதுகுறித்து இன்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற சாவர்க்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அண்ணாமலை, எச்.ராஜா ஒரு அற்புதமான மனிதர் என பாராட்டினார். தனது பேச்சு குறித்து எச்.ராஜாவே விளக்கம் கொடுத்துவிட்டதாக கூறிய அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சி சார்பில் தாமும் அது குறித்து உரிய விளக்கத்தை அளித்துவிட்டதாக சுட்டிக்காட்டினார். தமிழ்நாடு பாஜக பத்திரிகையாளர்களை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை எனக் கூறிய அண்ணாமலை, இத்துடன் எச்.ராஜா குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.
எச்.ராஜாவின் பேச்சு குறித்து சர்ச்சை எழுந்தவுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பத்திரிகையாளர்கள் குறித்து புகழ்ந்து பேசினார். ஆனால், எச்.ராஜாவின் பேச்சுக்கு கண்டனமோ விளக்கமோ தெரிவிக்கவில்லை. எச்.ராஜாவும் காரைக்குடியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தனது பேச்சை நியாயப்படுத்த மட்டுமே முயன்றார். மன்னிப்பு கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.