புதுச்சேரியில் GST வரி மாற்றம்: பழைய லேபிள்களுடன் பொருட்கள் விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் அபராதம்! எச்சரிக்கை
புதுச்சேரி: ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மத்திய அரசு செய்த சீர்திருத்தங்கள் காரணமாக பழைய லேபிள்கள் கொண்ட பொருட்களின் விலையை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் புதிய வரி விகிதத்தில் விற்பனை செய்ய வேண்டும்.

புதிய வரி விகிதத்தில் விற்பனை
மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (GST) விகிதச் சீர்திருத்தங்களை ஒட்டி, திருத்தப்பட்ட விலை விவரங்கள் இல்லாமல் பழைய விலைக்கே பொருட்களை விற்பனை செய்யும் மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகளுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று புதுச்சேரி எடையளவை கட்டுப்பாட்டு அதிகாரி மேத்யூ பிரான்சிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜி.எஸ்.டி. வரி விகிதத்தில் சீர்திருத்தம்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்.,
மத்திய அரசு GST ஜி.எஸ்.டி. வரி விகிதத்தில் சீர்திருத்தம் செய்து, அதை 5 சதவீதம், 18 சதவீதம் என இரண்டு கட்டமைப்புகளாக எளிமைப்படுத்தியுள்ளது. குறிப்பாக, உயிர்காக்கும் மருந்துகள் 12 சதவீதத்தில் இருந்து வரி இல்லாமலும் அல்லது 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. சட்டமுறை எடையளவை (உறையிட்ட பொருட்கள்) விதிகள் 2011, பிரிவு 18 (3)-ன் கீழ், ஒரு பொருளின் மீதான வரி திருத்தப்படும்போது, உற்பத்தியாளர்கள் குறைந்தது இரண்டு விளம்பரங்கள் மூலமாகவும், அங்கீகரிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு சுற்றறிக்கை மூலமாகவும் அதைத் தெரிவிக்க வேண்டும்.
எனினும், உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு பிரிவு 33-ன் கீழ் விலக்கு அளித்துள்ளது. இதன் அடிப்படையில், ஜி.எஸ்.டி. திருத்தத்திற்கு முன்பு (அதாவது கடந்த மாதம் 22-ம் தேதிக்கு முன்பு) உற்பத்தியாளர், பேக்கர், இறக்குமதியாளரால் லேபிள் ஒட்டப்பட்டு மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகளிடம் விற்பனை செய்யப்பட்ட பொருட்களை, மற்றும் முன்னரே உற்பத்தி செய்யப்பட்ட பேக்கேஜிங் பொருள் அல்லது ராப்பரை 31.03.2026 வரை அல்லது அந்த பேக்கிங் பொருள் தீர்ந்து போகும் தேதி வரை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
ரூ.1 லட்சம் அபராதம்
இவ்வாறு விற்பனை செய்யப்படும் பொருட்களில் உள்ள லேபிள் மீது, தெளிவாகக் காணக்கூடிய இடத்தில் திருத்தப்பட்ட விலை விவரங்களை முத்திரையிட்டோ அல்லது ஸ்டிக்கர் ஒட்டியோ தான் விற்பனை செய்ய வேண்டும். பொருட்களைப் பழைய ஜி.எஸ்.டி. விலைக்கு அல்லது திருத்தப்பட்ட விலை விவரங்கள் ஒட்டப்படாமல் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், விதிமீறும் மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகளுக்கு, சட்டமுறை எடையளவை சட்டம், 2009-ன் பிரிவு 36 (2)-ன் கீழ் அதிகபட்ச தண்டனையாக ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அந்த செய்திக் குறிப்பில் மேத்யூ பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.





















