'ஆளுநர் மாளிகை புகாரில் உண்மையில்லை' கருக்கா வினோத் சிசிடிவி காட்சியை வெளியிட்ட காவல்துறை
பிரபல ரவுடி கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல ரவுடி கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கமளித்துள்ளார்.
பெட்ரோல் வெடிகுண்டு:
கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் செல்ல முயன்றார். அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனைக் கேட்டு ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய, மாநில போலீசார், அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சம்பவ இடத்துக்கு கிண்டி, சைதாப்பேட்டை போலீசார் வந்தனர். தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.
பிரபல ரவுடி கருக்கா வினோத்:
இதுதொடர்பாக பெட்ரோல் குண்டு வீசிய நபரை மடக்கி பிடித்து நடத்தப்பட்ட விசாரணையில், குற்றச் செயலில் ஈடுபட்டது பிரபல ரவுடி கருக்கா வினோத் என தெரிய வந்தது. இதனிடையே ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “ராஜ்பவனில் நடந்த தாக்குதல் குறித்த புகாரை காவல் துறை பதிவு செய்யவில்லை. இவ்வழக்கில் அவசர கதியில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
இந்நிலையில் ரவுடி கருக்கா வினோத் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் தேனாம்பேட்டையில் இருந்து ஆளுநர் மாளிகை வரை கருக்கா வினோத் தனியாக நடந்து வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் ஆளுநர் மாளிகை முன்பு அவர் பெட்ரோல் குண்டு வீசுவதை போலீசார் தடுக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பேசிய டிஜிபி சங்கர் ஜிவால், “இந்தியாவின் மிகவும் அமைதியான மாநிலம் தமிழ்நாடு என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் முதல் உயர் பதவிகளில் இருப்பவர்கள் வரை அரசு வகுத்துள்ள சட்டப்படி பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.
மேலும், ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை, சர்தார் வல்லபாய் படேல் சாலையில் தான் வீசப்பட்டது. அவர் 4 பெட்ரோல் குண்டுகளில் இரண்டு வெடித்தன. ரவுடி கருக்கா வினோத்தை 5 காவலர்கள் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் பிடிக்க வரும்போது அவர்கள் மீது வினோத் பெட்ரோல் குண்டு வீச முயன்றான்.
ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டபடி, விஷமிகள் உள்ளே நுழைய முயன்றதாக கூறியது உண்மையில்லை. சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு அரசியல் பின்னணி உள்ளதால் என்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. ஆளுநர் மாளிகையில் இருந்து புகார் வருவதற்கு முன்பே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விட்டது. 253 காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். ஆளுநர் எங்கு சென்றாலும் பாதுகாப்பு வழங்குகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.