சென்னை விரிவாக்கம்...1,200க்கும் மேற்பட்ட கிராமங்கள் இணைப்பு... அரசாணை வெளியீடு - முழு தகவல்கள் இதோ...
அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பகுதிகள் சென்னையில் இணைக்கப்படுகின்றன.
![சென்னை விரிவாக்கம்...1,200க்கும் மேற்பட்ட கிராமங்கள் இணைப்பு... அரசாணை வெளியீடு - முழு தகவல்கள் இதோ... govt Order issued for expansion of Chennai to 5904 sq km over 1200 villages set to be added சென்னை விரிவாக்கம்...1,200க்கும் மேற்பட்ட கிராமங்கள் இணைப்பு... அரசாணை வெளியீடு - முழு தகவல்கள் இதோ...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/22/d7f6002065378915bd01f4f446e1bbfe1666439214820224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை பெருநகர பகுதியை (சிஎம்பிஏ) தற்போது உள்ள 1,189 சதுர கிமீ பரப்பளவில் இருந்து 5,904 சதுர கிமீ பரப்பளவாக விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பகுதிகள் சென்னையில் இணைக்கப்படுகின்றன. இதற்கு, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) திட்டம் முன்மொழிந்திருந்தது.
இதுகுறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் முதன்மை செயலாளர் ஹிதேஷ் குமார் வெளியிட்ட உத்தரவில், "மேல்குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 1,225 கிராமங்கள் சென்னை பெருநகர பகுதியில் இணைக்கப்படுகின்றன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி தாலுகாக்களைச் சேர்ந்த 550 கிராமங்களும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுக்காவில் இருந்து 44 கிராமங்களும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தாலுகாக்களில் இருந்து 335 கிராமங்களும் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்கழுகுன்றம் மற்றும் வண்டலூர் தாலுகாக்களைச் சேர்ந்த 296 கிராமங்களும் சென்னை பெருநகர பகுதிகளில் இணைக்கப்படுகின்றன.
சென்னையை விரிவாக்குவதற்கான முயற்சி கடந்த அதிமுக ஆட்சியில் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், பல காரணங்களால் தாமதமானது. திட்டத்தின்படி எந்தெந்த பகுதிகள் எல்லாம் இணைக்கப்படுகின்றனவோ அங்கு வாழும் மக்களிடம் இருந்து ஆட்சேபனைகளையும் ஆலோசனைகளையும் பெறுவதற்கான பணி கடந்த சில மாதங்களில் விரைவுப்படுத்தப்பட்டன.
இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இம்மாதம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான இறுதி ஒப்புதலை வழங்கினார்.
சென்னை பெருநகர பகுதியை சுமார் 8,800 சதுர கிலோமீட்டராக விரிவுபடுத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தாலும், பின்னர், அதன் பரப்பளவு 5,904 சதுர கிமீ ஆகக் குறைக்கப்பட்டது.
தற்போது வரை, நாட்டின் முக்கிய பெருநகரங்களிலேயே சென்னைதான் சிறிய நகரமாக உள்ளது. ஆனால், விரிவாக்கத்தின் மூலம் மற்ற பெருநகரங்களுக்கு இணையாக சென்னையின் பரப்பளவு அதிகப்படுத்தப்பட உள்ளது.
இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நிர்வாக அமைப்பிலான மாற்றங்கள் விரைவில் நடைமுறைக்கு வரும் என அரசு தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை பெருநகரப் பகுதியை மூன்றாகப் பிரிக்க சிஎம்டிஏ பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் சென்னை பெருநகரை, சென்னை பெருநகர பகுதி மத்திய என்றும், கூடுதலாக சேர்க்கப்படும் பகுதிகளை சென்னை பெருநகர பகுதி வடக்கு, சென்னை பெருநகர பகுதி கிழக்கு என பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கூடுதலாக சேர்க்கப்படும் பகுதிகளை மாஸ்டர் திட்டத்தின் கீழ் அல்லாமல் பிராந்திய திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் எனக் கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)