Governor Ravi: பெண்களை மதித்து நடக்கவேண்டும் என ஆண் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்கவேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி
பெண்களை பின் தங்கயிருக்கச் செய்தாலோ, அவர்களின் திறமையையும் வலிமையையும் வெளிப்படுத்த வாய்ப்பளிக்காமல் இருந்தாலோ எந்த ஒரு சமூகமோ, நாடோ உண்மையான வளர்ச்சி அடைய முடியாது.
ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் பெண் ஆளுமைகளுடன் நடத்திய கலந்துரையாடல் ‘எண்ணித்துணிக’ மூன்றாம் அமர்வின் அங்கமாக இன்று ( மார்ச் 03 ) ராஜ்பவனில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:
- நம் தேசத்தின் பெண் சக்தி எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கே உத்வேகம் அளிக்கும் ஒரு சிறந்த ஆதார சக்தியாகும்.
- நம் சமூகத்தில், ஒவ்வொரு பெண்ணும் தங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்குவதற்கான எளிதான வாய்ப்பு கிடைப்பதில்லை. வெற்றி இலக்கை அடைய அவர்கள் பல தடங்கல்களையும் தடைகளை கடக்க வேண்டும்.
- யூடியூபரான சமையல் கலை தொழில்முனைவோர் மீனாட்சி, கல்வியில் பட்டம் பெறாதவர். ஆனாலும் மக்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கிறார். லட்சக்கணக்கானோர் அவரை பின்தொடர்கின்றனர். ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தினாலும், எதிர்கொண்ட தடைகளை சமாளிக்கும் துணிவாலும் தான் அவரால் இந்த நிலையை அடைய முடிந்தது.
- எந்த ஒரு சமூகமோ நாடோ அதில் உள்ள பெண்களை பின் தங்கயிருக்கச் செய்தாலோ அவர்களின் திறமையையும் வலிமையையும் வெளிப்படுத்த வாய்ப்பளிக்காமல் இருந்தாலோ உண்மையான வளர்ச்சி அடைய முடியாது.
- காலனித்துவத்துக்கு முந்தைய காலத்தில், நம் பெண்களும் கிட்டத்தட்ட ஆண்களுக்கு இணையாக கல்வி கற்றனர். முடிவெடுக்கும் இடத்தில் இருந்தனர். ஆனால் ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு பெண்களின் சக்தி குறைந்து, அவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். அதனால் நாடும் சமூகமும் பாதிக்கப்பட்டன.
- இந்த நாடு காலனியாதிக்கத்தில் இருந்து விடுபட்டாலும், பெண்கள் முன்வந்து தலைமைப் பதவி வகிக்காதவரை, இந்த நாடு வளர்ச்சியடையாது என்பதை நமது தலைவர்கள் உணர்ந்துள்ளனர். சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர், மகாகவி பாரதி போன்ற பல சிறந்த தொலைநோக்கு பார்வையாளர்கள் பெண்களுக்கான சம உரிமைகள் மற்றும் அதிகாரமளித்தலுக்காக குரல் கொடுத்தனர்.
- பட்டங்கள் ஆள்வது, சட்டங்கள் செய்வது, பாரினில் பெண்கள் நடத்த வந்தோம், எட்டும் ஆணுக்கிங்கே பெண் இலைப்பிள்ளை காணென்று கும்மியடி என்ற பாரதியின் பாடல் வரிகளையும் ஆளுநர் வாசித்தார்.
- காலத்துக்குக் காலம் சட்டங்கள் இயற்றப்பட்டன, ஆனால் பெண்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சமூக தடைகளைக் கடந்து அவர்களுக்கு சம உரிமை கிடைக்கும் சூழ்நிலை உருவாக்கப்படவில்லை.
- இன்று பெண் சக்தியின் எழுச்சியும் மறுமலர்ச்சியும் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பிரதிபலிப்பதைக் காண்கிறோம்.
- அந்த காலத்தில் ஆயிரம் ஆண்களுக்கு, சுமார் 925 பெண்கள் இருந்தனர். இதனால் பெண் குழந்தை அதிகம் பிறக்கவில்லை என்று அர்த்தம் இல்லை, வெட்கக்கேடான வகையில் சில இடங்களில் பெண் சிசுக்கொலைகள் நடந்தன, ஒருவேளை பெண்கள் பிறந்து விட்டாலும் அக்குழந்தை ஆண் குழந்தைக்கு நிகராகவோ சரியாகவோ வளர்க்கப்படவில்லை. அத்தகைய பாகுபாடுகளை பெண்கள் எதிர்கொண்டனர்.
- ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மருத்துவ கவனிப்பு இல்லாததால், பெண் குழந்தைளால் உயிர் பிழைக்க முடியவில்லை. அன்றைய குடும்பங்கள் ஆண் குழந்தைகளுக்கே முன்னுரிமை அளித்தன, இது பெண் குழந்தைகளின் இறப்புக்கு வழிவகுத்தது.
- 2010ம் ஆண்டு வரை, பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள், எண்ணிக்கையில் அதிகமாக இருந்தனர். ஆனால் 2010க்குப் பிறகு பெண்கள் அதிக எண்ணிக்கையில் வந்த அடிப்படை மாற்றத்தை நாம் கவனித்தோம், பல்வேறு மாநிலங்களில் காணப்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக, முடிவெடுக்கும் பொறுப்புகளுக்கு பெண்கள் கருதப்பட்டனர்.
- இன்று தமிழ்நாட்டில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தையும் அவர்களின் வளர்ச்சியையும் நாம் பார்க்கிறோம் என்பது இந்த மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.
- இன்று, வளர்ந்து வரும் நம் மகள்களிடையே நம்பிக்கையை வளர்த்து, அவர்கள் ஆணுக்கு சமமான பாலினத்தவர்களாக இருப்பதற்குத் தகுதியானவர்கள் என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
- தமிழ்நாட்டின் 20 பல்கலைக்கழகங்களின் ஆளுநராக, ஆண் பட்டதாரிகளை விட பெண் பட்டதாரிகளே அதிகமாக இருப்பதை நான் கவனிக்கிறேன். எண்ணிக்கையில் மட்டுமல்ல, மதிப்பெண் வைத்திருப்பவர்கள் என்ற நிலையிலும் பெண்கள் மிகச் சிறப்பாக விளங்குவதைக் காண்கிறோம், இதுவே நாட்டின் புதிய பெண் சக்தியாகும்.
- இன்று, இளம் பெண் குழந்தைகளுக்கு சரியான கல்விச் சூழல் கிடைப்பதை உறுதிசெய்துள்ளோம். கிராமப்புறங்களில் உள்ள நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் தங்கள் வீடுகளில் குடிநீர் வசதி, வீடுகளில் சமையல் எரிவாயு, வீட்டிலேயே கழிப்பறை போன்ற வசதிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
- ஒரு காலத்தில் பெண்களுக்கு உகந்தவை அல்ல என்று சில வேலைகள் கருதப்பட்டன. ஆனால், இன்று ஆண்களுக்கு இணையான அனைத்து வேலைகளையும் பெண்களும் சமமாகச் செய்யும் பல துறைகளில் புதிய வழிகள் திறக்கப்பட்டுள்ளன.
- சமீப காலம் வரை பெண்களுக்கு முற்றிலும் தடை செய்யப்பட்ட துறைகள் என சில இருந்தன. ஆனால் இன்று நமது மகள்கள் ஜெட்- போர் விமானங்களில் பறக்கிறார்கள். இன்று நடப்பது தடைகள் அடிப்படையிலான போர் அல்ல, மூளைகள் அடிப்படையிலானது, அதில் நம் பெண்கள் தங்களின் திறமையை நிரூபித்து மிளிர்கின்றனர்.
- பல்வேறு துறைகளில் சாதனை உச்சம் தொட்டவர்கள், சாதித்துக் கொண்டிருப்பவர்கள், தங்கள் குறிப்பிட்ட தொழில் வளையத்துக்கு உள்ளே மட்டும் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல், தங்களைச் சுற்றியுள்ள மக்களை ஊக்குவிக்கவும், இளைஞர்களைச் சந்தித்து அவர்களை ஊக்குவிக்கவும், நம்பிக்கையை வளர்க்கவும், தங்களின் வாழ்க்கை பயணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். அதன் மூலம் சாதிக்கத் துடிக்கும் மக்களை நம்மால் உற்சாகப்படுத்த முடியும்.
- 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில், 500 பேர் என்ற அளவிலேயே தொழில்முனைவோர் எண்ணிக்கை இருந்தது. இன்று அந்த எண்ணிக்கை 90,000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஸ்டார்ட்அப்களைத் தொடங்குவதன் மூலமும், புதுமையான யோசனைகளை செயல்படுத்துவதன் மூலமும் தேசத்தைக் கட்டியெழுப்ப முடியும் அந்தப் பணிக்கு பெண்கள் பங்களிப்பு வழங்க வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்தினார்.
- உலகம் இந்தியாவை ஒரு உந்து சக்தியாக அங்கீகரிப்பதாகக் கூறிய ஆளுநர், பெருந்தொற்று, பருவநிலை மாற்றம் போன்ற உலக நெருக்கடிகளுக்கு இந்தியா எதிர்வினையாற்றிய விதத்தை ஒப்பிட்டுப் பார்த்தார்.
- உலக வல்லரசுகள் பெருந்தொற்று காலத்தின் போது தடுப்பூசிகளை உற்பத்தி செய்தன. ஆனால், அந்த நெருக்கடியைக் கூட தடுப்பூசியை அதிக விலைக்கு மற்றவர்களுக்கு விற்கும் வாய்ப்பாக அவை பயன்படுத்தின, இந்திய விஞ்ஞானிகளோ சிறந்த தடுப்பூசிகளைக் கண்டுபிடித்தனர். அவற்றை தடுப்பூசிகள் தேவைப்படும் 150க்கும் மேற்பட்ட வறிய நாடுகளுக்கு இந்தியா இலவசமாக வழங்கியது.
- தேவைப்படுவோருக்கு உதவுவது நமது பாரம்பரியத்திலும் மரபணுவிலும் இருக்கிறது, பிறரது துன்பத்தை கூட நம்மால் தாங்க முடியாது என்பதற்கு அது உதாரணம். அந்த துன்பத்தை தணித்து மக்களை மீட்க முடிந்தால் அதற்கு உதவுவோம். அதுதான் நம் பாரதத்தின் இயல்பு.
- உலக நாடுகள் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டபோது அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உட்பட பல நாடுகளின் பொருளாதாரம் பாதித்தன. அது இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது, ஆனால் நமது பொருளாதாரம் அந்த சூழலிலும் வளர்ந்தது. அப்போது இந்திய பொருளாதார வளர்ச்சியை உலகளாவிய மீட்சியின் இயங்கு சக்தியாக உலகமே இந்தியாவைப் பார்த்தது. இது தான் புதிய இந்தியாவின் பயணம்.
- நாம் ஐந்தாவது பெரிய பொருளாதாரம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று சர்வதேச நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அடுத்த 20 ஆண்டுகளில் நாம் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறுவோம். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா உலகின் தலைசிறந்த நாடாக இருக்க வேண்டும் என்று நமக்கு நாமே இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
- இன்று உலகம் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. காலநிலை நெருக்கடி - காடுகளை அழித்தல், ஆறுகளில் வண்டல் மண் அள்ளுதல், உயரமான கட்டடங்கள் கட்டுதல் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரங்களை உறிஞ்சுதல், கார்பன் கழிவுகள் மற்றும் படிம எரிபொருட்களின் அதிகப்படியான பயன்பாடு ஆகியவற்றின் மூலம் இந்த பூமியையும் அதன் வளங்களையும் பொறுப்பற்ற முறையில் அழித்துவிட்டோம். இந்த காரணிகளால், தாய் பூமி வெப்பமடைகிறது, பனிப்பாறைகள், பனிக்கட்டிகள் உருகுகின்றன மற்றும் ஆறுகள் வறண்டு வருகின்றன. இது தற்போது உலகளாவிய பிரச்சனையாக மாறியுள்ளது. பெரும் நாடுகள் அதைப்பற்றி சிந்திக்கவில்லை. ஆனால், நமது இந்தியா, புதைபடிவ எரிபொருளில் இருந்து பசுமை ஆற்றலுக்கு மாறியது.
- 'பாரதம்' கடந்த 5-6 ஆண்டுகளில் ஏற்கெனவே 40-60 சதவீத பசுமை ஆற்றலை நாம் சாதித்து விட்டோம் என்பதை நீங்கள் அறிந்தால் மகிழ்ச்சியடைவீர்கள். இந்தியாவால் இதை எப்படி சாதிக்க முடியும் என்று ஆரம்பத்தில் மக்கள் நினைத்தனர். ஆனாலும் நமது வேகம் குறையவில்லை, நாம் வளர்ந்து வருகிறோம். சூரிய சக்தி, காற்றாலை மூலம் ஆற்றல் பெறுகிறோம்.
- 2030ஆம் ஆண்டுக்குள், உலகிலேயே பசுமை ஹைட்ரஜனை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறும் என்பதை உலகின் பிற நாடுகளுக்கு நிரூபிப்போம். பருவநிலை நெருக்கடியில், இந்த நாடு உலகிற்கு வழி காட்டுகிறது. உலகிற்கும் நன்மை தரும் நாடு இந்தியா என்றும் அது வளர வேண்டும் என்பதையும் உலகம் இப்போது உணர்ந்துள்ளது.
- இப்படிப்பட்ட நிலையில், ஒரு பெண் சக்தியாக, நீங்கள் சுயபரிசோதனை செய்து கொண்டு, துணிச்சலுடன் செயல்பட்டால், அது தனி நபராக உங்களுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் நல்லது.
- இந்திய பெண்கள் தொடர்ந்து கனவு காணவும், தைரியமாகவும் வளர வேண்டும் என்று ஆளுநர் அழைப்பு விடுத்தார். அப்படிசெய்யும்போது, அவர்கள் தனிப்பட்ட முறையில் வளர்வது மட்டுமின்றி தங்கள் தேசத்தை வலிமையடையச் செய்கிறார்கள்.
- சீனா சிறிய நாடுகளை எப்படிக் கடனில் ஈர்த்து அவர்களைக் கவர்ந்து இழுக்கிறது என்பதை எடுத்துக்காட்ட ஆளுநர், இலங்கையின் ஹம்பான்தோட்டாவில் ஒரு பில்லியன் டாலர்கள் மதிப்பில் துறைமுகம் கட்ட கடன் கொடுத்த நிகழ்வை விளக்கினார். இந்திய பெருங்கடல் பகுதியில் கடல் வழித் தொடர்புக்கு அருகில் துறைமுகம் கட்டப்பட்டால், பெரும்பாலான கப்பல்கள் பழுது பார்க்கவும் எரிபொருள் நிரப்பவும் வரும் என்றும் அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்றும் சீனா இலங்கைக்கு ஆசை காட்டியது. ஆனால் துறைமுகம் கட்டப்பட்ட போதும் அங்கு கப்பல்கள் வரவில்லை, இந்த நிலையில், வாங்கிய பணத்தை எப்படி திருப்பி செலுத்துவது என்ற கேள்வி வந்தது. அதற்கு தீர்வையும் சீனர்களே கொடுத்தனர். நீண்ட கால குத்தகைக்கு துறைமுக நிலத்தை குத்தகைக்கு தர அவர்கள் யோசனை கூறி அதை பெற்றும் விட்டனர். இப்போது அந்த பகுதி ஒரு சீன பிரதேசமாக கருதப்படுகிறது. இது இயற்கையாகவே இலங்கையின் பிராந்திய இறையாண்மையை பாதிக்கிறது. ஆனால், மாறாக, இந்தியா இலங்கைக்கு 5 பில்லியன் டாலர்களை வழங்கியது, அதில் 600 மில்லியன் டாலர்கள் மானியமாக வழங்கப்பட்டது. இந்தியா வழங்கிய பணத்தில் மக்கள் நலன்களை நிறைவேற்றும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், சாலை வசதிகள் போன்றவை நிறுவப்பட நாம் உதவினோம். இதனால்தான் உலக நாடுகள் சீனாவின் கடன் வழங்கல் நடவடிக்கையை ஒருவித அச்சத்துடன் பார்க்கின்றன. ஆனால் இந்தியா அவர்களுக்கு உதவும்போது அந்த நாடுகள் மகிழ்ச்சி அடைகின்றன.
- இரண்டாம் உலக போருக்குப் பிறகு சர்வதேச உலக ஒழுங்கில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் ரஷ்யா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்கி சக்தி வாய்ந்ததாக மாறின. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலிலும் பிரிட்டன், பிரான்ஸ் வீட்டோ அதிகாரங்களைக் கொண்டுள்ளன, அதேசமயம் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்குள்ள நாடுகள் அதில் உறுப்பினராக முடியாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அந்த நாடுகள் இந்தியாவை தங்களின் 'குரலாக' பார்க்கின்றன.
- இந்தியா மிக உயரிய வரலாற்றைக் கொண்டுள்ளது. நமது சிந்தனைச் செயல்பாட்டிலும் பாரம்பரியத்திலும் நாம் அனைவரும் ஒன்றே என்று நாம் நம்புகிறோம் அதனால்தான் 'வசுதைவ குடும்பகம்' என்று நாம் நமது பாரம்பரியத்தை அழைக்கிறோம். புறநானூரில் கூட யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகள் இருப்பதன் மூலம் நாம் அக்காலத்திலேயே உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதும் எண்ணத்தை கொண்டிருந்தோம் என்பது புரியும்.
- 2047க்குள் நம் நாட்டை உலகின் தலைசிறந்த நாடாக மாற்ற வேண்டும். நமது தேச வரலாற்றில், அது விரிவாக வளர்ச்சியைடக் கூடியதாக உலகம் பார்க்கிறது. இந்த வாய்ப்பை நாமும் பயன்படுத்தி நாட்டுக்கு பங்களிப்பை வழங்குவோம்.
ஆளுநர் உரையாற்றியதும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், அவரிடமும் ஆளுநரின் மனைவி லட்சுமி ரவி அவர்களிடமும் கேள்விகளை எழுப்பினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களில் ஒருவர், ஒரு பெண் எப்படி குடும்பத்தின் பலமாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர்?
இதற்கு பதிலளிக்கும் வகையில் "பெண் சக்தி" பற்றி பேசிய ஆளுநரின் மனைவி லட்சுமி ரவி , பெண் தொழில் முனைவோர், தொழில் வல்லுநர்கள் ஆகியோரின் பணி வீட்டிலிருந்தே தொடங்குகிறது. எனது சொந்த வாழ்க்கை அனுபவத்தை ஒப்பிடுச் சொல்கிறேன், ஒவ்வொரு பெண்ணும் ஒரு குடும்பத்தின் உந்து சக்தி. ஒவ்வொரு வெற்றிகரமான ஆணின் பின்னும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள், ஆனால் ஒவ்வொரு வெற்றிகரமான பெண்ணின் பின்னாலும் ஒரு ஆண் இருப்பான் என்று நாம் கேள்விப்படுவதில்லை. இதைச் செய்வது, மனநிலையின் மாற்றத்திலிருந்து வருகிறது.
சமீபத்திய நாகாலாந்து தேர்தல் முடிவுகளில் மாநில வரலாற்றில் முதல் முறையாக இரண்டு பெண்கள் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகியுள்ளனர்.
நாகாலாந்தில் பெண்கள் பொது முடிவுகளில் பங்கேற்பதைத் தடை செய்யும் நாட்கள் ஒரு காலத்தில் இருந்தன. பெண்களுக்கு வாக்குரிமை கூட அங்கு இருந்திருக்கவில்லை. ஆனால் மாற்றம் நடக்கிறது ஆனால் அது மெதுவாக உள்ளது. பெண்கள் துர்கையின் அவதாரம், அவர்கள்தான் உண்மையான சக்தி, அனைத்தும் பெண்கள் கையில் இருக்கிறது” என்று கூறினார்.
அவர் பேசி முடித்தவுடன், சிரித்தப்படி ஆளுநர் ஆமோதித்து ஒப்புக்கொண்டார்.
பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆளுநர், செங்கோட்டையில் பிரதமர் பேசியதை நினைவு கூர்ந்தார், ”எங்கள் மகள்கள் வெளியே செல்லும்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நாங்கள் பல முறை கூறுகிறோம். ஆனால், வெளியில் இருக்கும் பெண்களை மரியாதையுடன் நடத்தவும், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தவும் உங்கள் மகன்களை நீங்கள் ஏன் கேட்கவில்லை? இத்தகைய மனநிலை மாற்றம் மட்டுமே நிலைமையை மாற்றும், அது ஒரே இரவில் நடந்து விடாது. ஆனால் இந்த மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு ஒவ்வொருவரின் வீட்டிலிருந்தும் தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பெண்களின் அதிகாரத்தை மேம்படுத்த கலை மற்றும் கலாச்சாரம் எவ்வாறு உதவும்? என்ற கேள்விக்கு பதிலளித்த ஆளுநர்,”பெண்கள் அதிக விவேகமுள்ளவர்கள், அதனால்தான் பெண்கள் தலைமைப் பதவிக்கு வரும்போது அவர்களின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். முக்கியமான விஷயங்களில் வழிகாட்டி முடிவெடுப்பவர்கள் பெண்கள்தான். இது காலனித்துவம் வரை நடைமுறையில் இருந்தது. ஆனால் அந்த கலாசாரம் அழிக்கப்பட்டது.
ஒரு கட்டடம் இடிக்கப்பட்டால், அதை புனரமைக்கலாம் - ஆனால் ஒரு கலாசாரம் அழிக்கப்பட்டால், அதை மீண்டும் கட்ட முடியாது. இந்தக் களத்தில் பரதநாட்டியம், கதலி, குச்சிப்புடி போன்றவற்றைக் கற்கும் பெண் குழந்தைகள் அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கின்றனர், அந்த வகையில் அந்தச் சூழலில், பெண்கள் நமது கலை மற்றும் கலாச்சாரத்தின் பாதுகாவலர்கள் என்பதில் சந்தேகமில்லை” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
ஒரு கேள்விக்கு பதிலளித்த ஆளுநர், மின்சாரம் இல்லாத கிராமத்தில் வசித்த தனது பள்ளி நாட்களையும், பள்ளிக்கு சுமார் 8 கிலோமீட்டர் தூரம் காலில் செருப்புக்கூட இல்லாமல் நடக்க வேண்டிய நிலைமை இருந்ததையும் அவசியத்தையும் நினைவு கூர்ந்தார். ஆனால் அந்த கடினமான சூழ்நிலைகள் தனக்கு எவ்வாறு உதவியது என்றும், அந்த நெருப்பு தன்னை வளர்த்துக் கொள்ளும் ஆற்றலை அளித்தது என்றும் தெரிவித்தார். கடின சூழலில் உருவாகும் அத்தகைய நம்பிக்கை ஒருவரை வளர்த்துக் கொள்ள உதவும் என்று தெரிவித்தார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், நமது பெண் குழந்தைகள் மற்றும் இளம் மாணவர்களை ஆலமரத்தின் விதை போன்றவர்கள் என்று கூறி அவர்கள் மனதை வலுப்படுத்த வேண்டும் என்று ஆளுநர் கூறினார். அது சிறிய விதைதான் ஆனால் ஒரு மரம் அதற்குள்ளே உள்ளது. சாதிப்பதற்கு எல்லையே இல்லை, வானமே எல்லை என்றும், எதையும் சிறப்பாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை குழந்தைகளுக்கு ஊட்டி பெற்றோர் வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பெரிய கனவுகளை காண இளைய தலைமுறையினருக்கு அழைப்பு விடுத்த ஆளுநர், அந்த கனவுகளை நனவாக்க உழைத்தால், அவர்களை வளரவிடாமல் தடுக்கும் தடைகள் எதுவும் முன் நிற்க முடியாது, நெருப்பில் சுடும்போதுதான் தங்கம் பிரகாசிக்கிறது, அதே போல் நீங்கள் சவால்களை எதிர்கொள்ளும்போது வலிமை வளரும். அதனால் இடர்களை எதிர்கொள்வதும், அதை சந்திக்கும் நம்பிக்கையுடன் நீங்கள் இருக்க வேண்டும். வாழ்க்கையில் சவாலை சந்திக்கும் அனுபவத்திற்கு நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும், அது உங்களில் சிறந்ததைக் காணவும் உங்களை வளர்க்கும் உதவுகிறது.
பெற்றோர் தம் குழந்தைகளுக்கு சிறந்த வாழ்க்கை சூழலையும், பாதுகாப்பான வாழ்க்கைச் சூழலையும், ஒரு அசௌகரியமான வாழ்க்கை சூழ்நிலையில் அவர்கள் எதிர்மறையான வாழ்க்கை சூழலை உணர அனுமதிக்கக்கூடாது. குழந்தைகள் தன்னிச்சையாக முடிவெடுக்கும் வாய்ப்பை நாம் வழங்க வேண்டும், அந்த முடிவை அடைய நாம் மட்டுமே அவர்களுக்கு வழிகாட்ட முடியும். நீங்கள் சரியாக வளரவில்லை என்றால் அது உங்களின் சொந்த இழப்பு மட்டுமல்ல, வீட்டுக்கும்- நாட்டுக்கும் இழப்பு என்பதை குழந்தைகளை உணரும் வகையில் வளர்க்க வேண்டும்.
பணியிடத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆளுநர்..., ”பெண்கள் மிகவும் உறுதியானவர்களாக இருக்க வேண்டும், எந்த வேலைச் சூழலில் அவர்கள் பணிபுரிந்தாலும், அவர்களின் தேவைகள் மற்றும் உரிமைகளைப் பெறுவதற்கு அவர்கள் மிகவும் துணிவுடன்செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
உடற்தகுதி மற்றும் ஆரோக்கியம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆளுநர்..,
“ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் இரண்டும் சமமான முக்கியம் வாய்ந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு, உடல் தகுதி முக்கியமானது என்பதை நாடு உணர்ந்தபோது, பிரதமர் ’கேலோ இந்தியா’ மற்றும் ’உடற்பயிற்சி இந்தியா’ திட்டங்களை ஒரு இயக்கமாக தொடங்கினார். உடல் ரீதியாக மட்டுமல்ல, யோகா செய்வதன் மூலம் மனதையும் வலுவாக வைத்துக் கொள்ள வேண்டும்” என்று பதிலளித்தார்.
6 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர், பெண் குழந்தைகளுக்காக உங்கள் அறிவுரை என்ன என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஆளுநர்..
”உங்கள் உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள், நன்றாகப் படிக்க வேண்டும். சக ஆண் பிள்ளைகளை விட உங்களைக் குறைவாக நினைக்காதீர்கள். ஆண்களை விட பெண்கள் அதிக சக்தி வாய்ந்தவர்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்”. என்று தெரிவித்தார்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கான யோசனைகள் மற்றும் வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறுவது எப்படி? என்ற கேள்விக்கு பதிலளித்த ஆளுநர்..,
“சாலைகள், ரயில், விமானம், துறைமுகங்கள் மற்றும் டிஜிட்டல் இணைப்பு ஆகியவற்றில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் மாநிலம் சிறப்பாக உள்ளது. மனித வளத்தில் மாநிலம் சிறந்து விளங்கினாலும், ஒரு தொழில் முனைவோர் மாநிலமாக மாறுவதற்கு, மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அதிக பங்களிப்பு இருக்க வேண்டும். ஒன்று உங்கள் முனைப்பு அல்லது ஆசை. இரண்டாவதாக, நமது திறன்களைப் பயன்படுத்தி நீங்கள் அதை எவ்வாறு செய்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்வது, மூன்றாவது ஆரம்ப மூலதனம் மற்றும் மாநிலத்தில் ஒரு வணிகத்தைத் தொடங்க நாம் எவ்வாறு செயல்படுவோம் என்பது” என்று பதிலளித்து நிதி ஆயோக்கின் நோக்கத்தை அப்போது அவர் விளக்கினார், இது வணிக யோசனைகளை வழங்குகிறது மற்றும் அதை எப்படி செய்வது என்று அந்த ஆர்வலர்களுக்கு வழிகாட்டுகிறது என்பதை பற்றி குறிப்பிட்டார். கல்லூரி படிப்பை எட்டாத அம்மா சமையல் மீனாட்சி சிறந்த தொழில் முனைவோராக இருப்பதை குறிப்பிட்டு ஆளுநர் பாராட்டினார்.
பெண்களின் களங்கம், மன அழுத்தம் மற்றும் மனநலம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது ஆளுநர் நீண்ட பதிலளித்தார்.
நாட்டில் ஆட்டிசக் குழந்தைகளின் பிறப்பு அதிகரிப்பு மற்றும் மன அழுத்தம் பல்வேறு நிலைகளில் பெற்றோரை எவ்வாறு பாதிக்கிறது என்பதை விளக்கும் போது அந்த சூழ்நிலை குறித்து ஆளுநர் வேதனை தெரிவித்தார். இன்று குறைந்தபட்சம் 75% பெண்கள் குடும்பப் பிரச்சனைகள் அல்லது பிற தனிப்பட்ட பிரச்சினைகளால் மன அழுத்தத்தில் இருக்கக்கின்றனர் என்று அவர் கூறினார். AIIMS ஆய்வை மேற்கோள் காட்டி, ஆட்டிஸக் குழந்தையுடன் 74% தாய்மார்கள் தீவிர மனச்சோர்வில் உள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, நமது குடும்ப அமைப்பு சிதைந்து வருகிறது, இது அவர்களின் மன அழுத்தத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
முன்பெல்லாம் கூட்டுக் குடும்பச் சூழல் இருந்தது. ஆனால் இன்று கணவன், மனைவி, குழந்தை மட்டும் ஆதரவின்றி தனிமையில் வாழும் சூழல் உள்ளது. அத்தகைய நிலையில் முழு அழுத்தமும் தாயின் மீதுவிழுகிறது. இதைப் போக்க, ஆலோசனை அல்லது மனநல மருத்துவரை அணுகுவது அவசியம், ஆனால் நாம் ஒரு உளவியல் ஆலோசகர் அல்லது மனநல மருத்துவரிடம் சென்றால், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராகவோ அல்லது தனிமைப்படுத்தப்பட்டவராகவோ கருதப்படுகிறார் என்ற களங்கம் உள்ளது. அத்தகைய சிந்தனை செயல்முறை மாற்றப்பட வேண்டும். சில நல்ல பள்ளிகளில் கூட, மாணவ-மாணவிகளுக்கு ஆலோசகர்கள் உள்ளனர், குறிப்பாக குழந்தை 10 அல்லது 12 ஆம் வகுப்புக்கு செல்லும் போது, பள்ளிகள் அவர்களுக்கு ஆலோசனைக்காக ஆலோசகர்களை ஏற்பாடு செய்கின்றன. நான் மன அழுத்தத்தில் உள்ளேன் அல்லது நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன் என்பதை அடையாளம் காண சில ஆலோசனைகள் தேவை.
மகப்பேறு மருத்துவ நிபுணரும், தமிழ்நாட்டில் முதல் IVF பிரசவத்தின் முன்னோடியுமான டாக்டர் கமலா செல்வராஜை, தமிழ் மற்றும் தெலுங்கில் 29 சமையல் புத்தகங்களை எழுதிய மல்லிகா பத்ரிநாத், ஒலிம்பியன் தங்கப் பதக்கம் வென்ற மற்றும் அர்ஜுனா விருது பெற்ற இளவானில் வளரிவன், குழந்தையின்மை சிறப்பு நிபுணர் டாக்டர் நந்திதா தாக்கூர் , அம்மா சமையல் மற்றும் பிரபலமான யூடியூப் சேனலின் மீனாட்சி அம்மாள், தொழிலதிபர் ஸ்ரீமதி, கல்வி உளவியலாளர் Dr.சரண்யா ஆகியோரை ஆளுநர் பரிசளித்து பாராட்டினார்.
மக்கள் பவனாக மாறிய ராஜ்பவன் ஆளுநர் முதன்மை செயலர் பெருமிதம்
முன்னதாக வரவேற்புரையாற்றிய ஆனந்தராவ் பாட்டீல், ஐஏஎஸ், ஆளுநர் பல உத்வேகம் தரும் யோசனைகள் மற்றும் சிறந்த தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்றும் மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்களுடன் அவர் தொடர்ந்து இதேபோன்ற விவாதங்களை நடத்தி வருகிறார் என்றும், ராஜ்பவன் தற்போது மக்கள் பவனாக மாறியுள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்தார். மகளிர் அறக்கட்டளை தலைவர் திவ்யா ஸ்வப்னா ராஜ் நன்றியுரை வழங்கினார்.
பிரபலங்கள் டாக்டர் கமலா செல்வராஜ், டாக்டர் நந்திதா, திருமதி. மல்லிகா பத்ரிநாத், திருமதி. மீனாட்சி சீனிவாசன், திருமதி. சரணய்யா, மருத்துவர்கள், பொறியாளர்கள், விளையாட்டுத்துறையினர், பட்டயக் கணக்காளர்கள், சுயதொழில் முனைவோர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ராஜ்பவன் அலுவலர்களின் குடும்பத்தினர், பணியாளர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.