Governor Ravi: மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களில் தற்போது வரை 8 மசோதாக்கள் மட்டுமே ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அரசும்- ஆளுநரும்
தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் உடனடியாக ஒப்புதல் கொடுக்காமல் கிடப்பில் வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இதனைடுத்து ஆளுநரின் செயல்பாடுகளுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் நீதிபதியே சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டனர். இந்த நிலையில் அளுநர் ஒப்புதல் கொடுத்த மசோதாக்கள், நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பான பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 முதல் முதல் 2025 அக்டோபர் 31 தேதி வரை 211 சட்ட மசோதாக்கள் பெறப்பட்டு அதில் 170 மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மசோதாக்களின் நிலையையும் ஆளுநர் மாளிகை பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது.
மசோதாக்களின் நிலை
- 73 மசோதாக்களுக்கு ஒரு வாரத்தில் ஒப்புதல்
- 61 மசோதாக்களுக்கு ஒரு மாதத்திலும் ஒரு மாத காலத்திற்குள் ஒப்புதல்
- 3 மாத காலத்தில் 27 மசோதாக்களுக்கு ஒப்புதல்
- 3 மாத காலத்துக்கு மேல் 9 மசோதாக்களுக்கு ஒப்புதல்
- குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் 27 மசோதாக்கள்
- 16 மசோதாக்கள் தமிழக அரசின் கோரிக்கை ஏற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதாக ஆளுநர் மாளிகை தகவல்
- 4 மசோதாக்கள் தமிழக அரசுக்கு திரும்ப அனுப்பப்பட்டது
- 2 மசோதாக்களை தமிழக அரசு திரும்ப பெற்றுக் கொண்டது
தற்போது வரை 8 மசோதாக்கள் மட்டுமே ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
2025 அக்டோபர் 31 ஆம் தேதி வரை- மொத்த மசோதாக்களின் நிலை
81% மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். (இதில் 95% மசோதாக்களுக்கு மூன்று மாதங்களுக்குள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது). 13% மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. (இந்த மசோதாக்களில் 60% மாநில அரசின் பரிந்துரையின் பேரிலேயே ஒதுக்கப்பட்டுள்ளன).மீதமுள்ள மசோதாக்கள் 2025 அக்டோபர் கடைசி வாரத்தில் பெறப்பட்டு, தற்போது வரை 8 மசோதாக்கள் பரிசீலனையில் உள்ளன.
ஆளுநர் அவர்கள் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும், தமிழ்நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் ஒவ்வொரு மசோதாவையும் உரிய கவனத்துடன் பரிசீலித்துள்ளார். அவர் எப்போதும் இந்திய அரசியலமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே செயல்பட்டுள்ளார். அத்துடன், எந்தவொரு அரசியல் சார்பையும் பொருட்படுத்தாமல், முழுமையான நேர்மை, வெளிப்படைத்தன்மை, அர்ப்பணிப்பு, நடுநிலைமை, விடாமுயற்சி மற்றும் ஜனநாயக நடைமுறைகளின் மீதான மரியாதையுடன் தனது அரசியலமைப்பு கடமைகளை ஆற்றி வருகிறார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















