1000 செங்கல் விலை இவ்வளவு.. 1 மெட்ரிக் டன் சிமெண்ட் இவ்வளவு… கட்டுமானப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்த தமிழக அரசு!
அதிகவிலைக்கு விற்பனை செய்து வந்த அனைத்து கட்டுமானப்பொருள்களும் இந்த விலையை தான் இனி பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் சில மாதங்களாக கட்டுமானப்பொருட்களின் விலை அதிகரித்து வந்த நிலையில், தற்போது 2021-2022 ஆம் ஆண்டிற்கான கட்டுமானப்பொருள்களின் விலையை நிர்ணயம் செய்து அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக கட்டுமானப்பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் இரண்டாம் அலையின் போது சில தளர்வுகள் அறிவிக்கப்போது, கட்டுமானப்பணிகள் மீண்டும் தொடங்கியது. ஆனால் சிமெண்ட், கம்பி, செங்கல் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. இதனால் பாதியில் நிறுத்தி வைத்திருந்த கட்டுமானப்பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டது. மேலும் 30 முதல் 40 சதவீதம் வரை கட்டுமானப்பொருள்களின் விலை அதிகரித்துள்ளதால் இதற்கு உரிய நடவடிக்கை தேவை என கட்டுமானப் பொறியாளர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டி வந்தனர்.
ஆனால் சிமெண்ட உற்பத்தி நிறுவனங்களோ, கொரோனா 2-வது அலையால் மிகப்பெரிய வருவாய் இழப்பினை சந்தித்து விட்டதாகவும், தற்போது 40 சதவீத தொழிலாளர்களுடன் மட்டுமே உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகிறது. எனவே குறைவான அளவில் தான் கட்டுமானப்பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதால் இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாத ஒன்று என நிறுவனங்கள் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் இப்பிரச்சனை மற்றும் கட்டுமானப்பொறியாளர்களின் கோரிக்கைகள் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது. இந்த சூழலில்தான் தற்போது நடந்து முடிந்த தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கையின்போது, அமைச்சர் எ.வ வேலு, தற்போது மிகப்பெரிய பிரச்சனையை சந்தித்து வரும் கட்டுமானப்பொருள்களின் விலை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது 2021- 202 ஆம் ஆண்டிற்கான கட்டுமானப்பொருள்களின் புதிய விலைப்பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பில், பொதுப்பணித்துறையின் மூலம் பள்ளிக்கல்வி, மக்கள் நல்வாழ்வுத்துறை, உள்துறை, நீதிமன்றம், மீன்வளம். போக்குவரத்து, சமூக நலத்துறை போன்ற அரசு துறைகளுக்கான தேவையான கட்டிடப்பணிகளுக்கு உபயோகப்படுத்தும் கட்டுமானப்பொருள்களுக்கான விலை ஒரு மெட்ரிக் டன் ஸ்டீல் ரூ.51,750 என்றும் ஒரு மெட்ரிக் டன் சிமெண்ட் ரூ.5,960 என நிர்ணயம் செய்துள்ளது. அதேபோல 1000 செங்கல் விலை ரூ.7,695 எனவும், மணல் ஒரு யூனிட் ரூ.447 ஆக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இதேபோன்று அரசு சார்பில் கட்டப்படும் கட்டுமானப்பணியில் ஈடுபடும் கொத்தனாருக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.861 மற்றம், சித்தாள்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.718 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை அதிக விலைக்கு விற்பனை செய்துவந்த அனைத்து கட்டுமானப்பொருள்களும் இந்த விலையை தான் இனி பின்பற்ற வேண்டும் . மேலும் இதுவரை நடைபெறாமல் இருந்த கட்டுமானப்பணிகள் அனைத்தும் விரைந்து நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.