(Source: Poll of Polls)
TN Gold Loan Waiver: யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது? பட்டியல் இதோ!
TN Gold Loan Waiver: நகைக் கடன் தள்ளுபடி பெறுவதற்கு தேவையான தகுதிகள் குறித்த அறிக்கையை கூட்டுறவுத்துறை பதிவாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 9 ம் தேதி சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் பொது நகைக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பினை வெளியிட்டார்.
அதன்படி, ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்து அதற்கான தகுதிகள் குறித்தும், கடன் தள்ளுபடி பெறுவதற்கு எந்தெந்த நபர்களுக்கு தகுதி இல்லை என்பது குறித்தும் கூட்டுறவுதுறை பதிவாளர் சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்ற 48,84,726 பேரில் 35,37,693 பேருக்கு தள்ளுபடி கிடையாது எனவும், 28% பேர்களின் நகைக்கடன் மட்டுமே தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடன்தாரர் பயிர்க்கடன் 2021 தள்ளுபடியில் பயன்பெறாதவராக இருந்தால், கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி பெறுவார். அதேபோல், பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவரின் குடும்ப உறுப்பினராக இருந்தால், அவருக்கு பொது நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டை எண் மற்றும் ஆதார் எண்ணை சரியாக பதிவிறக்கம் செய்திருந்தால் அவர்கள் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதிபெறுகின்றனர்.
ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நகைக் கடன்கள் மூலம் உத்திரவாதம் அளிக்கப்பட்ட நகையில் இருந்து மொத்த எடை 40 கிராமுக்கும் குறைவாக பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் தனிநபர்களுக்கு தள்ளுபடி உண்டு. அதேபோல், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அரசு அலுவலக பணிகளில் இல்லாத நபர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி பெற்றவர்களாக உள்ளனர்.
மேலும், நியாய விலை கடைகளில் மாதந்தோறும் பொருட்கள் வாங்கும் குடும்ப அட்டையினருக்கு தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்