சாட்சிகள் பொய் சொன்னாலும் சாட்சியம் பொய் சொல்லாது.. கோகுல்ராஜ் வழக்கு தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் மோகன்..
Gokulraj Honour Killing: சாட்சிகள் பொய் சொன்னாலும் சாட்சியம் பொய் சொல்லாது என கோகுல்ராஜ் வழக்கு தீர்ப்புக்குப் பின்னர் அரசு வழக்கறிஞர் ப.பா. மோகன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
Gokulraj Honour Killing: 'சாட்சிகள் பொய் சொன்னாலும் சாட்சியம் பொய் சொல்லாது' என கோகுல்ராஜ் வழக்கு தீர்ப்புக்குப் பின்னர் அரசு வழக்கறிஞர் ப.பா. மோகன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
கோகுல்ராஜ் ஆணவக் கொலை(Gokulraj Honour Killing) மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று அதாவது ஜூன் மாதம் 2ஆம் தேதி தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் தீர்ப்பை வழங்கியுள்ளனர். இந்த மேல்முறையீட்டு வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேருக்கான ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். அதேபோல் இந்த வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் 5 பேரை விடுவித்ததில் நாங்கள் செல்ல விரும்பவில்லை என கூறினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்த வழக்கின் அரசு வழக்கறிஞர் பவானி ப. மோகன் பேசியதாவது, ”உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. இந்த தீர்ப்பினை நான் வரவேற்கிறேன். கோகுல்ராஜ் வழக்கினைப் பொறுத்தவரையில், முதலில் இந்த வழக்கினை விசாரித்த காவல் அதிகாரி டி.எஸ்.பி விஷ்ணுப்ரியா தனது உள்ளுணர்வின் அடிப்படையில் கோகுல்ராஜ் தற்கொலை செய்துகொண்டார் என குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர் கோகுல்ராஜின் உடலை கூறு ஆய்வு செய்ய வேண்டும் என மூத்த வழக்கறிஞர் சங்கர சுப்பு தான் கோரிக்கை வைத்தார். இதனை நீதிமன்றம் ஏற்ற பின்னர் தான் வழக்கின் போக்கு முற்றிலுமாக மாறியது. இதனால், கோகுல்ராஜின் உடலை ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர் சம்பத் கூறாய்வு செய்த பின்னர் அளித்த அறிக்கையில்தான் கோகுல்ராஜ் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது”.
அதன் பின்னர், ”இந்த வழக்கில் நேரடி சாட்சியங்கள் பிறழ் சாட்சியமாக மாறிவிட்ட பின்னரும் கூட, விஞ்ஞானம் வளர்ந்த இந்த காலத்தில், சிசிடிவி கேமாராவில் கோகுல்ராஜ் மற்றும் சுவாதி திருச்செங்கோடு கோவிலுக்குச் சென்றது தெளிவாக இருக்கிறது. இந்த சிசிடிவி கேமரா 217வது சான்று ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த ஆவணத்தினை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்த பின்னர்தான் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உதவியாக இருந்தது”.
”இந்த வழக்கின் குற்றவாளிகளான யுவராஜ் உட்பட 8 முதல் 12 பேர் சிசிடிவி கேமரா பதிவில் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. குற்றவாளிகள் தங்களது மொபைல் போன்களை அணைத்து வைத்து விட்டு வேறு மொபைல்களை பயன்படுத்தினர். அதேபோல், வாகனங்களையும் மாற்றி பயன்படுத்தி வந்தனர். தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட யுவராஜ்தான் கோகுல்ராஜ் மற்றும் சுவாதியின் செல்போனை பறித்ததை ஒப்புக்கொண்டார். ஆனால் நீதிமன்றத்தில் மறுத்தார், தொடக்கத்தில் கோகுல்ராஜுடன் இருப்பது தான் தான் என்பதை ஒப்புக்கொண்டு விசாரணையில் மிகவும் முக்கிய சாட்சியமாக பார்க்கப்பட்ட சுவாதி, அதன் பின்னர் பிறழ் சாட்சியமாக மாறினார். இவர்களைக் குறிப்பிடும் வகையில், சாட்சிகள் பொய் சொன்னாலும் சாட்சியம் பொய் சொல்லாது” என குறிப்பிட்டு பேசினார்.