”விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து மக்களுக்கு சேவை செய்யப்போகிறேன்”.. சிறுவர்களின் வீடியோவால் சர்ச்சை
சமீபகாலமாகவே களத்தில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரச்சாரம் போலவே சமூக வலைதளங்களில் செய்யப்படும் பிரச்சாரங்களுக்கும் மிகுந்த வரவேற்பு உள்ளது
அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், பாமக நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிட விஜய் ஒப்புதல் அளித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் விஜய், தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு மறைமுகமாக ஒப்புதல் அளித்திருப்பதை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பலரும் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய தொடங்கிவிட்டதோடு, தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீப காலமாகவே களத்தில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரச்சாரம் போலவே சமூக வலைதளங்களில் செய்யப்படும் பிரச்சாரங்களுக்கும் மிகுந்த வரவேற்பு உள்ளது. அவை வாட்ஸ் ஆப் உள்ளிட்ட பல்வேறு தளங்களிலும் பகிரப்படுகிறது.இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் ஆன்லைனில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதுதான் தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை வேட்டியைக் கட்டிக்கொண்டு சிறுவர்கள் பேசிக்கொள்ளும் அந்த வீடியோவில் ஒருவர், “ காலேஜ் அப்ளிகேஷன் ஃபார்ம் இருக்கு... தளபதி பேட்ஜ் இருக்கு எது வேணுமோ நீயே முடிவு பண்ணிக்க..” என்கிறார். சற்று நேரம் யோசித்தப்படி பின்னணியில் பாடல் ஒலிக்க, உன்னால் முடியும் என எழுதியிருக்கிற விஜய் மக்கள் பேட்ஜை எடுத்து நடந்து வருகிறார் மற்றொரு சிறுவர். வெளியே வரும் அவர் “இனிமேல் புத்தகத்தை படிக்க தேவையில்லை.. மக்களைப் படிக்க போகிறேன்... மக்கள் இயக்கத்திலிருந்து மக்களுக்கு சேவை செய்யப்போகிறேன்” என வசனம் பேசுகிறார். உடன் இருக்கிற நண்பர்கள் அதை கைத்தட்டி வரவேற்கிறார்கள்.. அத்துடன் அந்த வீடியோ நிறைவு பெறுகிறது.
பள்ளி மாணவர்களை தவறான பாதைக்கு திருப்புகிற இம்மாதிரி வீடியோக்கள் ஆபத்தானவை. இம்மாதிரி விஷயங்களை நடிகர் விஜய் எவ்வகையிலும் ஊக்குவித்துவிட கூடாது. ரசிகர்களிடம் இது தவறு என வலியுறுத்த முன்வரவேண்டும். pic.twitter.com/5HH9lyp3zG
— Athisha (@athisha) September 23, 2021
இந்நிலையில் பள்ளி மாணவர்களைப் படிக்கவிடாமல் இதுபோன்று திசை திருப்புவது ஆபத்தான போக்கு. நடிகர் விஜய் இவற்றையெல்லாம் ஊக்குவிக்கக்கூடாது என பலரும் சமூக வலைதளங்களில் குரல் எழுப்பி வருகின்றனர்.
“நாட்டுக்கு சேவை செய்றதுன்னா அரசியல்ல இறங்கி தான் செய்யனுமா? இவ்ளோ நாள் நல்லா படிச்சி டாக்டர்,போலிஸ்,கலெக்டர்,டீச்சர்,ராணுவம் இந்த மாதிரி எதிலாவது சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்யனும்னு 90s kids ஆ நாங்க நெனச்சதுல்லாம் பொய்யா?” என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.