கிறிஸ்தவத்திற்கு எதிரான செயல்களை செய்ததற்காக ஜார்ஜ் பொன்னையாவை கடவுள் தண்டிப்பார் - நீதிபதி
உலகம் தென்னாப்பிரிக்க நிறவெறி எதிர்ப்பு தலைவர் டெஸ்மாண்ட் டுடுவை இழந்து வாடியது. அது குறித்து கோபாலகிருஷ்ண காந்தி எழுதிய இரங்கல் செய்தியை மனுதாரர் படிக்க வேண்டும் என விரும்புகிறேன்
கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த ஆண்டு ஜூலை 18ஆம் தேதி கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடந்த பாதிரியார் ஸ்டோன்சுவாமி நினைவஞ்சலி கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியது சர்ச்சைக்குள்ளானது. பின்னர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்களையும், பாரதமாதாவை கடுமையாக விமர்சித்து பேசியதாக ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலீஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜார்ஜ் பொன்னையா, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், "முறையாக போலீஸ் அனுமதி பெறப்பட்டு கூட்டம் நடைபெற்றது. எனது பேச்சின் குறிப்பிட்ட பகுதிகளை தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் பரப்பப்பட்டுள்ளது. அதற்கு வருத்தம் தெரிவித்து சமூக வலை தளங்களில் வீடியோ வெளியிட்டேன். உடல் நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,"பஞ்சபூதங்கள் என அழைக்கப்படும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பை மக்கள் புனிதமாக பார்க்கின்றனர். நிலத்தை பூமித்தாயாக மக்கள் வணங்கி வருகின்றனர். மனுதாரர் கூட்டத்தில் பேசும்போது பூமித்தாயை அவதூறாக பேசியுள்ளார். இந்து மதத்தினரின் மத நம்பிக்கையை தவறாக பேசியுள்ளார். இரு மதங்களுக்கு இடையில் மோதலையும், பிரிவினையையும் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம் பிற மாவட்டங்களை போல் இல்லை. மத பதட்டமான பகுதியாகும். அங்கு நிலவும் அமைதியான சூழலை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். மத பதட்டத்தை அதிகரிக்கும் வகையில் பேசக்கூடாது. அம்பேத்கார் இந்து மதத்தை கடுமையாக விமர்சனம் செய்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அம்பேத்கார் தலைவர். தலைவர்களையும், மதச்சார்பு உள்ளவர்களையும் ஒன்றாக பார்க்கக்கூடாது.
மனுதாரர் பேசிய கூட்டம் அனுமதி பெற்று நடத்தப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தால் கொரோனா தொற்று பரவல் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் மத்தியிலும் அவர் பேசவில்லை. எனவே மனுதாரர் மீதான இபிகோ 269, 143, 506 (1) மற்றும் தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டப்பிரிவு 3-ன் கீழ் வழக்கு பதிவு செய்தது செல்லாது. இதனால் இப்பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன.மத நம்பிக்கையை சீர்குலைத்தல், இரு பிரிவினர் இடையே மோதலை உருவாக்குதல், பிரிவினையை தூண்டுதல் ஆகிய குற்றங்களுக்காக இபிகோ 295 (ஏ), 153 (ஏ) மற்றும் 505 (2) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது செல்லும். இப்பிரிவுகளை ரத்து செய்ய முடியாது.
சமீபத்தில் பால்ஜான்சன் என்பவர் எழுதியிருந்த புத்தகத்தை படித்தபோது, அதில் ஒரு நம்பிக்கையாளரின் சுய வாழ்க்கை வரலாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகு நான் இயேசு கிறிஸ்து மீது அளவற்ற அன்பு உள்ளவனாக மாறினேன். அதில் அன்பானவர்களே, நாம் ஒவ்வொருரையும் நேசிக்க வேண்டும், ஏனென்றால் அன்பு, நேசம் என்பது கடவுளிடம் இருந்து வருகிறது. யார் நேசிக்கிறார்களோ அவர்கள் கடவுளுக்கு பிறந்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் உலகம் தென்னாப்பிரிக்க நிறவெறி எதிர்ப்பு தலைவர் டெஸ்மாண்ட் டுடுவை இழந்து வாடியது. அது குறித்து கோபாலகிருஷ்ண காந்தி எழுதிய இரங்கல் செய்தியை மனுதாரர் படிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல முடியும், கிறிஸ்தவத்துக்கு எதிரான செயல்களை செய்ததற்காக இறுதி தீர்ப்பு நாளின் போது மனுதாரரை கடவுள் கண்டிப்பார் என கருதுகிறேன்" என தீர்ப்பில் கூறியுள்ளார்.