Ilayaraja: ''பதவிக்காக மோடியை புகழவில்லை... பின்வாங்கவும் மாட்டேன்.'' இளையராஜா சொன்னது இதுதான்!
தான் பதவி வாங்குவதற்காக மோடியை புகழவில்லை என்று இளையராஜா கூறியதாக கங்கை அமரன் தகவல்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைபடுவார் என இசைஞானி இளையராஜா எழுதியதாக கூறப்படும் வரிகளுக்கு ஆதரவும், தற்போது கடும் எதிர்ப்பும் கிளப்பி வருகிறது. தற்போது இதுதொடர்பாக இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் கருத்து கூறியுள்ளார். இதுதொடர்பாக கங்கை அமரன் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்கமுடியாது என இளையராஜா கூறினார். தனக்கு எதிரான விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதாகவும் என்னிடம் இளையராஜா கூறினார். மற்றவர்கள் எப்படி கருத்து கூறுகிறார்களோ அதேபோல்தான் கருத்தைக் கூறினேன் என்றார். தான் பதவி வாங்குவதற்காக மோடியை புகழவில்லை. தான் காட்சிக்காரர் இல்லை என்றும் கூறினார். அம்பேத்கரையும் பிடிக்கும், மோடியையும் பிடிக்கும். அதனால் ஒப்பிட்டு பேசினேன் என்று இளையராஜா கூறினார்” என்றார்.
புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் என்ற நிறுவனம் சமீபத்தில் "மோடியும் அம்பேத்கரும்" என்ற பெயரிலான புத்தகத்தை வெளியிட்டது. அந்த புத்தகத்தின் முன்னுரையை இசைஞானி இளையராஜா எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. அதில், இளையராஜா, ”அம்பேத்கரை தெரிந்துகொள்வதை போல அவரது கருத்தையும், சிந்தனைகளையும் செயல்படுத்துபவர்களையும் நாம் நிச்சயம் ஊக்கப்படுத்த வேண்டும். நாட்டின் வளர்ச்சி, தொழில்துறை, சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்டவைகளை மோடி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், அம்பேத்கரின் கருத்தும் சந்திக்கும் இடத்தை இந்த புத்தகம் ஆய்வு செய்ய முயற்சிக்கிறது.
பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் கீழ் நாடு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், அனைத்து துறைகளிலும் முன்னேறி கொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அதில், பிரதமர் மோடியின் "மேக் இன் இந்தியா" திட்டம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத்தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்து, சமூகத்தில் பின் தங்கிய மக்களுக்கு சட்டரீதியிலான பாதுகாப்பை அவர் உறுதி செய்துள்ளார். வீடுகள், கழிப்பிடங்களை ஏழை மக்களுக்காக மோடியின் ஆட்சியில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடைந்துள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முத்தலாக் தடை சட்டத்தால் பெண்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை கண்டு அம்பேத்கரே மோடியை நினைத்து பெருமைக்கொள்வார். அம்பேத்கரும், மோடியும் இந்தியா பற்றி பெரிதாக கனவு கண்டவர்கள், செயலில் நம்பிக்கை கொண்டவர்கள் எனவும் முன்னுரையில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்