இலவச மின்சாரம்; வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - கே.பி.ராமலிங்கம்
தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச மின்சாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கரூரில் பேட்டி
திமுக அரசின் பால் விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் நாளை மண்டல அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செந்தில் நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய அளவிலான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மாநில துணை தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது செய்தியாளர்களிடம் கே.பி.ராமலிங்கம் பேசியதாவது:
பாஜக நிர்வாகிகள், பட்டியலின மக்களின் சந்திப்பு நடைபெற்றது. அவர்களுடன் அரை நாள் தங்கி தீர்வு காணப்படுகிறது. தமிழகம் முழுவதும் ஒன்றிய அளவில் கட்சி ரீதியாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பாஜக எழுச்சியாக நாட்டு மக்களுக்கு ஆதரவாக விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தும். அரவக்குறிச்சியில் 50 ஆயிரம் பேருக்கு மின் இணைப்பு தருவதாக கூறி கணக்கு காட்டி இருக்கிறார்கள். போலி நாடகத்தை நடத்தி இருக்கிறார்கள். ஏற்கனவே 1 லட்சம் பேருக்கும், தற்போது 50 ஆயிரம் பேருக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது பொய். இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். உள்ளூர் அமைச்சரை முதல்வர் பாராட்டி வருகிறார். கடந்த காலத்தில் முதல்வர் பேசியது வாட்ஸ் அப்பில் வெளியாகி இருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையை ஏற்று அமைச்சரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டியது முதல்வரின் பொறுப்பு. விசாரணை, தீர்ப்பு வரும் வரை அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அப்போது தான் மக்கள் மத்தியில் நம்பிக்கை வரும். 90% பணிகள் நிறைவேற்றி விட்டோம் என்பது பொய். தற்போது தான் நலத்திட்டங்கள் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார். மழையால் பாதிக்கப்பட்டவற்றை சீரமைக்க நீங்கள் எதை வேண்டுமானாலும் கேளுங்கள், பிரதமர் தருவார். அவற்றை முறையாக செய்ய வேண்டும்.
வெள்ள வடிகால் பகுதிகள் 90 சதவீத பணிகள் முடித்து விட்டதாக சொன்னது பொய். இன்று பார்க்கும் அந்த காட்சிகள் கண்கொள்ளா காட்சியாக உள்ளது. முதல்வரின் கூற்றுக்குப் பிறகு தான், மழைநீர் பாதிப்பு குறித்து இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். முதல்வருக்கு இது தேவையா. எல்லோர் கைகளிலும் வீடியோ வசதியுடன் செல்போன் வைத்திருக்கிறார்கள். முதல்வரை ஏமாற்ற வேண்டும் என சிலர் செயல்படுகிறார்கள். முதல்வர் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நல்லது.
நம்பிக்கை, நாணயத்துடன் இருக்க வேண்டும், கொஞ்ச காலத்துக்கு நல்லபடியாக இருக்க வேண்டும். அவர்களுடைய ஆட்சி காலத்தை முழுமையாக ஆள வேண்டும். இலவச மின் இணைப்பு பெற்ற பயனாளிகள் பெயர், முகவரி, ஆதார் எண்ணுடன் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கடந்த மழை வெள்ளத்தின் போது முதன்மை செயலாளர் என்ன வேண்டும் என கேட்டாரோ அதற்கு நிதி கொடுக்கப்பட்டது. மாநில அரசு utilisation certificate கொடுத்தால் வழங்கப்படும். மின் இணைப்பு கொடுக்கப் போகிறோம் என்ற புத்தகத்தில் கடிதம் கொடுத்தவர்களின் பட்டியல் அது. அது முழுமையானது அல்ல என்றார்.