GIM Raghuram Rajan : "இந்த மாதிரி திட்டம்தான் நமக்கு தேவை" தமிழக அரசின் திட்டத்தை பாராட்டிய ரகுராம் ராஜன்
Raghuram Rajan : தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டு வரும் நான் முதல்வன் போன்ற திறனை மேம்படுத்தும் திட்டங்களை உருவாக்க வேண்டும் என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
Raghuram Rajan : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 2030ஆம் Raghuram ஆண்டுக்குள் தமிழ்நாட்டை டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் செயல் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
செமிகண்டக்டர் மற்றும் மேம்பட்ட மின்னணுவியல் கொள்கை, 2024, வெளியிடப்பட்டதோடு, தமிழ்நாடு அரசுடன் பல வெளிநாட்டு நிறுவனங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. குறிப்பாக, வியட்நாம் நாட்டை சேர்ந்த மின்னணு வாகன தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட், தூத்துக்குடியில் வாகன தயாரிப்பு ஆலையை உருவாக்கி 16,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கு ஐடியா தந்த ரகுராம் ராஜன்:
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், "சீனா செய்தது போல் இந்தியா குறைந்த செலவில் உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தத் தேவையில்லை. மாறாக சேவைகளை விரிவுபடுத்துவது போன்ற மாற்று வழிகளை யோசிக்க வேண்டும்" என்றார்.
உற்பத்தி துறையை போன்று சேவைத்துறையால் அதிக வேலைவாய்ப்புகளை தர இயலுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ரகுராம் ராஜன், "நாம் சேவைத்துறையில் உள்ள வேலைவாய்ப்பை பற்றி பேசும் போது, எப்போதும் தகவல் தொழில்நுட்பத்தை (ஐடி) மட்டுமே யோசிக்கிறோம். ஐடியைத் தாண்டி சேவைத்துறையில் எத்தனையோ வேலைகள் உள்ளன. நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்றால், உற்பத்தியே ஒரு சேவை சார்ந்த வேலையாக மாறி வருகிறது.
எங்கு வேலைவாய்ப்புக்கான சூழல் இருக்கிறதோ, அங்கு வேலைகளை உருவாக்க வேண்டும் என்று நான் கூறுவேன். குறைந்த திறன் கொண்ட உற்பத்தியைப் பெறுவதற்கு பெரும் மானியங்கள் தேவை என்ற கருத்தை நான் எதிர்ப்பேன்.
"நான் முதல்வன் போன்ற திட்டங்களை உருவாக்குவோம்"
மக்கள் மீது முதலீடு செய்வோம் என்று நான் கூற விரும்புகிறேன். நான் முதல்வன் போன்ற திறனை மேம்படுத்தும் திட்டங்களை உருவாக்குவோம். நமது பல்கலைக்கழகங்களின் தரத்தை மேம்படுத்துவோம். நமது பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவோம். ஆரம்பகால குழந்தை பராமரிப்பில் கவனம் செலுத்துவோம். இந்த வழிகள் மூலம் நாம் தொழிலாளர்களை மேம்படுத்துவோம்" என்றார்.
கொரோனாவால் விநியோகம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து குறைந்த செலவிலான உற்பத்தியில் இந்தியா கவனம் செலுத்துகிறதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ரகுராம் ராஜன், "மேற்கத்திய நாடுகளுக்கு, சிப் தயாரிப்பு மற்றும் ட்ரோன்கள் போன்ற துறைகளில், சீனாவை அதிகமாகச் சார்ந்திருப்பது பற்றிய கவலை உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, பிரச்னை என்னவென்றால், மலிவான சீனப் பொருட்கள் நிறைய வருகிறது. அதை சார்ந்து இருக்கிறோம். நமது உற்பத்தித் திறனை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். பொதுவாக, அதிக மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தியில் நாம் மிகவும் போட்டித்தன்மையுடன் இருக்கிறோம். உற்பத்தியை மேம்படுத்துவோம். நமது பலம் எங்குள்ளது என்பதையும் கவனத்தில் கொள்வோம். நம் பலம் என்பது அதிக மதிப்பு கூட்டப்பட்ட துறையில் உள்ளது" என்றார்.